H3N2: குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு, இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி; ICMR நிபுணர் பரிந்துரைப்பு
கொரோனா பாதிப்பிற்கு பிறகு, தற்போது நாடு முழுவதும் பரவி வரும் காய்ச்சலுக்கு காரணம், H3N2 வைரஸ் கிருமி என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் கிருமியினால், நாட்டில் இறப்புகள் நிகழ ஆரம்பிக்க, தற்போது, வல்லுநர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்டு வருகின்றனர். இதற்கிற்கிடையே, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நடத்தும் தேசிய காய்ச்சல் மையத்தின் (NIC) தலைவர், ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்த பருவநிலை மாற்றத்தில், H3N2 நோய் தொற்று அதிகரிப்பது "வழக்கமான ஒன்றுதான்" எனவும், தேவைப்பட்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, தடுப்பூசியை பரிந்துரைக்கிறார்.
பொதுமக்கள் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்
NIC நிறுவனத்தின் தலைவர் மேலும் கூறுகையில், இந்த பருவத்தில், ஒன்று அல்லது இரண்டு வைரஸ்கள் மற்றொரு வைரஸுடன் இணைந்து மாறுபடும். பின்னர் காற்றில் பரவி, சுவாச நோய்களுக்கு வழிவகுக்கும் எனக்கூறினார். "ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை, H1N1 (பன்றிக்காய்ச்சல்) அதிகமாக இருக்கும். அதன் பின்னர், நவம்பர் முதல், H3N2 ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறது. தற்போது, H3N2 உடன் டைப் B வைரஸும் இணைந்து நோய் தொற்றை உருவாக்கி வருகிறது," என்று அவர் கூறினார். இந்த நோய்த்தொற்றுகளைத் தடுக்க, மக்கள் சுகாதாரத்தை பேண வேண்டும், அதோடு, கோவிட் கால நடத்தைகளான, முகமூடிகள் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.