இந்தியாவில் அதிகரிக்கும் தொண்டை வலி மற்றும் வைரல் காய்ச்சலுக்கான காரணங்கள் என்னவென்று மருத்துவர்கள் விவரிக்கின்றார்
சமீப காலமாக, இந்தியாவில் பரவலாக நிறைய மக்களுக்கு, வைரல் காய்ச்சலும், தொண்டை வலியும் ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பரவி வரும் வைரஸ் தொற்றிற்கு பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பொதுவாக 3-4 நாட்கள் நீடிக்கும் சாதாரண காய்ச்சல், இந்த வைரஸ் தொற்றில் இருந்து விடுபட, மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை ஆகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, எப்போதும் பரிந்துரைக்கப்படும் வழக்கமான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கூட, இந்த வகை இந்த தொற்றிற்கு பயன்தரவில்லை. சிலநேரங்களில் இதை நிவர்த்தி செய்ய ஸ்டெராய்டுகள் கூட தேவைப்படுகின்றன. நோய் தொற்றிற்கு சாத்தியமான காரணிகளை மருத்துவ நிபுணர்கள் விவரிக்கின்றனர்.
குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமற்ற உணவு பழக்கமும் காரணிகளாக பார்க்கப்படுகிறது
இந்தியாவில் இந்தாண்டு, வானிலை, தீவிர ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனால், வைரஸ் செயல்பாடு அதிகரித்துள்ளதாக நம்பப்படுகிறது. இதனால் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களை இவ்வகை தொற்றுகள் அதிகமாக பாதிக்கிறது. வானிலை மாற்றங்களுடன், பல நகரங்களில் நிலவும் மோசமான காற்றின் தரமும், நோய் தோற்று கிருமிகள் பரவலுக்கு உதவுகிறது. இது மட்டுமின்றி, கோவிட் 19 தொற்றுக்காலத்தின் போது பயன்படுத்தப்பட்ட மருந்துகளும், சிகிச்சைகளும், நம் உடலில் பக்கவிளைவை உண்டாக்கி இருக்கும். அதோடு, அப்போது குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியினால், தற்போது எளிதாக பல வைரஸ் தொற்றுகள் நம்மை தாக்குகிறது. அதுமட்டுமில்லாமல், தற்போது பலரும், ஆரோக்கியமான உணவுகளை புறக்கணித்து, பதப்படுத்தப்பட்ட, ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொள்ளுகின்றனர் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.