மருத்துவம்: கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம்
COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், நீரிழிவு நோயால் எளிதில் பாதிக்கப்படலாம் என JAMA Network Open என்ற பத்திரிக்கையில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதில், இந்த கோவிட் பாதிப்பு, உங்கள் உடலில் உள்ள குளுக்கோஸை எவ்வாறு பாதிக்கிறது எனவும் விளக்குகிறது. மேலும், நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன்பு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு, டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து குறைவாக இருப்பதாகவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. தற்போதைய கண்டுபிடிப்புகள் படி, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், வளர்சிதை மாற்றம் மற்றும் இருதய பிரச்சனைகளால் பாதிப்புக்கான ஆபத்தில் உள்ளனர் எனத்தெரியவந்துள்ளது.
தடுப்பூசி போடுவதால் குறையும் ஆபத்து
மேலும், நோய்த்தொற்றுக்குப் பிறகு வரும் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகள், இயல்பை விட 58% அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகளில், 54% பெண்கள் மற்றும் நோயாளிகளின் சராசரி வயது 47 ஆண்டுகள் எனவும் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்படாத நோயாளிகளுக்கு, கோவிட்-19 பாதிப்பிற்குப் பிறகு, டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து 2.7% ஆகவும், 74% நோயாளிகள், COVID-19 நோய்த்தொற்றுக்குப் பிறகு நீரழிவு நோய்க்கு ஆளானதாகவும் அறியப்படுகிறது . ஆனால், தடுப்பூசி போடப்பட்ட நோயாளிகளைப் பொறுத்தவரை, கோவிட்-19 பாதிப்பிற்குப் பிறகு, டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து 1.0% ஆகவே உள்ளது.