உலக புற்றுநோய் தினம்: HPV தடுப்பூசி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்
மனித பாப்பிலோமா வைரஸ்(HPV) என்பது பாலியல் ரீதியாக பரவும் ஒரு பரவலான தொற்று ஆகும். இது பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் பல்வேறு புற்றுநோய்களுக்கு வழிவகுக்கிறது. பிப்ரவரி 4 ஆம் தேதி உலகம் முழுவதும் உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் முக்கியமான உடல்நலக் கவலைகளை நிவர்த்தி செய்வது குறித்து விவாதிப்பது மிகவும் அவசியமாகும். உலகளவில் மில்லியன் கணக்கான பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மனித குலத்தின் மிகப்பெரும் எதிரியாக வளர்ந்து நிற்கும் ஒரு நோயாகும். அந்த நோயை தடுப்பதில் HPV தடுப்பூசியின் பங்கு மிகப்பெரியது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை உண்டாக்கும் அதிக ஆபத்துள்ள HPV வைரஸுகளுக்கு எதிரான HPV தடுப்பூசியை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?
பொதுவாக 9 முதல் 14 வயது வரையில், அதாவது பாலியல் செயல்பாடு தொடங்குவதற்கு முன் வழங்கப்படும் இந்த தடுப்பூசி, பல HPV விகாரங்களுக்கு எதிரான கவசமாக செய்லபடுகிறது. அது போக, இந்த தடுப்பூசி நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதுடன், HPV தொடர்பான கர்ப்பப்பை வாய் பிரச்சனைகளையும் கணிசமாகக் குறைக்கிறது. மேலும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான தற்போதைய போரில் இது ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது என்று சொன்னாலும் மிகையாகாது. தடுப்பூசியை தவிர, வழக்கமான செக்-அப்களையும் செய்வதும் மிக முக்கியமாகும். எந்த வகை புற்றுநோயாக இருந்தாலும் அதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால், அதை குணப்படுத்த முடியும். மேலும், ஆணுறைகளின் தொடர்ச்சியான பயன்பாடு HPV பரவும் அபாயத்தை திறம்பட குறைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.