உலக எய்ட்ஸ் தினம் 2023: எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பற்றிய மூடநம்பிக்கைகள்
கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் நாள், எச்ஐவி(மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ்கள்) மற்றும், அதனால் ஏற்படும் எய்ட்ஸ்க்கு(நோயை எதிர்க்கும் சக்தியில்லாமல் போய்விடுவது) எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த, உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மருத்துவ சிகிச்சை வழங்கப்படாத எச்ஐவி வைரஸ், உயிருக்கே ஆபத்தான எயிட்ஸ் ஆக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோய் குறித்த பல்வேறு மூடநம்பிக்கைகளும், பொய்யான தகவல்களும் இன்னும் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தத் தொகுப்பில், எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி குறித்து பரவலாக நம்பப்படும் மூடநம்பிக்கைகளும், அதற்கு பின்னால் உள்ள அறிவியலையும் பார்க்கலாம்.
எச்ஐவி எப்போதும் எயிட்சை உண்டாக்குகிறது
இது முற்றிலும் தவறான நம்பிக்கை. எச்ஐவி எயிட்சை உண்டாக்கும் என்றாலும், எச்ஐவி பாதித்த அனைவருக்கும் எய்ட்ஸ் ஏற்படுவதில்லை. தற்கால அறிவியல் முன்னேற்றத்தால், எய்ட்ஸ் ஏற்படுவதை முன்னரே கண்டறிந்து குணப்படுத்த முடியும். முறையான மருந்துகள் மற்றும் சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம், எச்ஐவி நோய் தொற்று எயிட்ஸ் ஆக மாறாமல் தடுக்க முடியும். எச்ஐவி பாதிப்பது மரண தண்டனைக்கு சமமானது எச்ஐவி பாதித்தவர்களின் அவர்களது நாட்களை எண்ணிக்கொண்டு இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். அது தவறானது. முறையான சிகிச்சை மூலம் எச்ஐவி பாதித்தவர்கள் சாதாரண மனிதர்களை போல வாழ முடியும். உண்மையில், இதன் மூலம் அவர்கள் சாதாரண மனிதர்களின் வாழ்நாள் அளவிற்கு வாழலாம். சிகிச்சை வழங்காத எச்ஐவி எயிட்ஸ் ஆக மாற, பல வருடங்கள் எடுக்கலாம்.
எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள், பாதுகாப்பாக குழந்தைகளைப் பெற முடியாது
இது எல்லா சந்தர்ப்பங்களிலும் தவறான கூற்று. எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது, அவர்களது மருத்துவர்களை சந்தித்து, ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை எடுத்துக் கொள்வதின் மூலம், குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று பரவுவதை தடுக்க முடியும். மகப்பேருக்கு பின் தாய் மற்றும் சேய் ஆறு வாரங்களுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம், அக்குழந்தைக்கு எச்ஐவி தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இருமல், தொடுதல் மூலம் எச்ஐவி பரவும்
பெரும்பான்மையான மக்கள் சளி தொடுதல் மூலம் எச்ஐவி பரவும் என கருதி, எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்குகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான புரிதல். மருத்துவர்களும், ஆய்வாளர்களும் எச்ஐவி பாதிக்கப்பட்டவரை தொடுவதன் மூலமோ, அவர் இரும்புவதின் மூலமோ, எச்ஐவி பரவாது எனக் கூறுகிறார்கள். இருப்பினும், தோலில் புண்கள் அல்லது சிராய்ப்புகள் இருந்தால், எச்ஐவி தோல் மூலமாக பரவலாம். அதேபோல், எச்ஐவி உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றின் மூலம் பரவாது என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் PrEP எடுத்துக் கொண்டால், உங்களுக்கு ஆணுறைகள் தேவையில்லை
PrEP அல்லது ஃப்ரீ எக்ஸ்போசர் ப்ரொல்ஆக்சிஸ்(pre-exposure prophylaxis) என்பது, எச்ஐவி தொற்று ஏற்படாமல் தடுக்க எடுக்கும் மருந்தாகும். இந்த மருந்து எடுத்துக் கொண்டவர்கள் ஆணுறை அணியத் தேவையில்லை என்ற, பொதுவான கருத்து நிலவுகிறது. இருப்பினும் அது முற்றிலும் தவறானது. இந்த மருந்து எடுத்துக்கொள்வது, எச்ஐவி ஏற்படாது என்பதை உறுதி அளிக்காது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பாதுகாப்பான பாலியல் நடைமுறைகளுடன், PrEPயை இணைக்க வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இதேபோல், மேலும் ஒரு மூட நம்பிக்கையாக, இரண்டு எச்ஐவி பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆணுறை அணிய வேண்டியது இல்லை என நம்பப்படுகிறது. அதுவும் முற்றிலும் தவறான நம்பிக்கை. எச்ஐவி ஏற்பட்டவர்களுக்கு ஆணுறை அணியாத போது, எச்ஐவியின் புதிய திரிபுகள்(strians) அல்லது பிற பாலியல் நோய்களால் பாதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.