உடல் உறுப்பு தானம் செய்வதில் முதலிடம் பிடித்த பெண்கள் - ஆய்வின் தகவல்
இந்தியா முழுவதும் கடந்த 25 ஆண்டுகளில் ஆண்களை விட பெண்களே அதிகளவு உடல் உறுப்பு தானம் செய்திருப்பது மத்திய சுகாதாரத் துறை கட்டுப்பாட்டிற்கு கீழ் செயல்படும் நோட்டா என்று கூறப்படும் தேசிய உடல் உறுப்பு தான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 25 ஆண்டுகளில் இந்த உடல் உறுப்பு தான மாற்று அறுவை சிகிச்சை மூலம் 29,000 ஆண்கள் பயனடைந்துள்ளனர். பெண்கள் வெறும் 6,945 பேர் மட்டுமே பயனடைந்துள்ளதாக ஆய்வின் தகவல் தெரிவிக்கிறது.
ஆய்வின் தகவல் 2019ம் ஆண்டின் தரவுகள் கொண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனையடுத்து 2019ம் ஆண்டின் தரவுகளை ஆய்வு செய்ததில் உடல் உறுப்பு தானம் செய்த 80% பேர் பெண்கள் என்பதும், இந்த தானத்தின் மூலம் மாற்று உடல் உறுப்புகளை 80% ஆண்கள் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த தகவலை 'எக்ஸ்பெரிமெண்டல் அன்ட் க்ளினிக்கல் ட்ரான்ஸ்பிளென்டேக்ஷன்' மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை உறுதி செய்துள்ளது. மேலும் இந்த அறிக்கையில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களே அதிகளவில் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
பொருளாதார அழுத்தம் காரணமாக பெண்கள் உடலுறுப்பு தானம் செய்வதாக தகவல்
இதனை வைத்து பொருளாதார அழுத்தம் காரணமாக பெண்கள் அதிகளவில் உடல் உறுப்பு தானம் செய்வதாகவும் கூறப்படுகிறது. அதே போல் ஆண்கள் தங்கள் குடும்பத்தினை பொருளாதாரம் ரீதியாக காப்பாற்ற உழைக்க வேண்டும் என்னும் காரணத்தினால் அறுவை சிகிச்சைகளை செய்து கொள்ள தயங்கி உடல் உறுப்பு தானம் செய்வதில்லை என்றும் தெரிகிறது. பிள்ளைகளுக்காக தாய்மார்கள், கணவருக்காக மாணவிகள், பெற்றோர்களுக்காக அவர்களது மகள்கள் என பெண்கள் உடல் உறுப்பு தானம் செய்ய தயார் நிலையில் உள்ளனர்.
மது பழக்கம் காரணமாக ஆண்களின் உடலுறுப்புகளே அதிகம் பாதிக்கப்படுகிறது
ஆனால் மனைவிக்காக கணவர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய அதிகளவு முன்வருவதில்லை என்றும் ஆய்வின் முடிவுகள் எடுத்துரைத்துள்ளது. தங்கள் குடும்பத்தினை தூக்கி சுமக்க வருமானம் ஈட்டும் ஆண்களின் உயிரினை காப்பாற்றுவது தங்கள் கடமை என்று பெண்கள் நினைத்து உடல் உறுப்பு தானம் செய்வதாகவும், மது பழக்கம் போன்ற தீய பழக்கங்களால் ஆண்களுக்கே அதிகளவு கல்லீரல், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படுகிறது.
உயிரிழந்த ஆண்கள் அதிகளவு உடல் உறுப்பு தானம் செய்கின்றனர்
மேற்கூறியவாறு பாதிக்கப்படும் ஆண்களை காப்பாற்ற பெண்கள் உறுப்புகளை வழங்க அதிகளவு முன்வருகின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இவற்றை தவிர்த்து இந்த ஆய்வு தகவலை பார்க்கையில், உயிருள்ள ஆண்களை விட உயிரிழந்த ஆண்கள் அதிகளவு உடல் உறுப்பு தானம் செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே சமயம், உயிரிழந்த பெண்கள் உடலுறுப்பு தானம் செய்வது மிக குறைவு என்றும் தகவல்கள் கூறுகிறது.