அதீத கவனக்குறைவா? அது இதனால் கூட இருக்கலாம்!
கவன குறைவு ஹைபர் ஆக்டிவிட்டி கோளாறு(ADHD) என்பது ஒரு பிரச்சனைக்குரிய நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும். பொதுவாவே இந்தியாவில் மனநலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உடல் நலத்தைப் பேணுவதற்கே தயாராக இல்லை என்ற சூழ்நிலையில் மனநலத்தைப் பற்றி எப்படி பேசுவது? உடல் நலனும் மன நலனும் வெவ்வேறாக இருந்தாலும் அவை இரண்டுமே ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது. உடல் பிரச்சனைகளால் மன நலனும், மன பிரச்சனைகளால் உடல் நலனும் பாதிக்கப்படலாம். எனவே, அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் இந்த நரம்பியல் வளர்ச்சிக் கோளாறைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். குழந்தைகளோ பெரியவர்களோ அதிக கவனக்குறைவோடு இருந்தால் அதற்கு காரணம் ADHDயாகக் கூட இருக்கலாம். குழந்தைகள் சரியாகப் படிக்காதற்கும் இது ஒரு காரணமாக இருக்கலாம்.
ADHD இருப்பதை எப்படி அறிந்துகொளவ்து?
ADHD உள்ளவர்கள் கவனக் குறைவோடும்(Inattention), அதீத இயக்கத்தோடும்(Hyperactivity), உணர்ச்சி வேக செயல்பாடுகளோடும்(Impulsivity) இருப்பர். ஆனால், கவனமின்னை பிரச்சனை இருக்கும் அனைவருமே துறுதுறுவென இருப்பதில்லை. இதில் ADD என்ற இன்னொரு வகை இருக்கிறது. இந்த வகைக் கோளாறு இருப்பவர்கள் பலர் மந்தமாகவும் தனிமையாகவும் காணப்படுவர். இந்த கோளாறுகளைக் குழந்தையாக இருக்கும் போதே கவனிக்காவிட்டால், பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்குப் பல்வேறு விதமான மனநல பிரச்னைகள் உண்டாகும். பலர் தங்களுக்கு இந்த நரம்பியல் கோளாறு இருக்கிறது என்று தெரியாமலே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கோ உங்கள் குழந்தைக்கோ இந்த அறிகுறிகள் இருந்தால் ஒரு மனநல மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும், ஒருவர் கவனக் குறைவாகவோ மந்தமாகவோ இருந்தால் அவர்களைத் தூற்றாதீர்கள். அவர்களுக்கு என்ன பிரச்சனையோ யாருக்குத் தெரியும்!