
கருப்பை அகற்றுதல் பெண்களின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி அறிவீர்களா?
செய்தி முன்னோட்டம்
பெண்களில் பொதுவாக காணப்படும் பிரச்சனைகளான நார்த்திசுக் கட்டி (ஃபைப்ராய்ட்- Fibroid), அதிக இரத்தப்போக்கு மற்றும் புற்றுநோய்களுக்கு சிகிச்சையாக கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை (ஹிஸ்டெரெக்டமி) பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இந்தச் செயல்முறையால் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தாலும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் நீண்டகால பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அறுவைச் செயல்முறை
கருப்பை அறுவை சிகிச்சை முறை பற்றி ஒரு குறிப்பு
Hysterectomy என்பது, கர்ப்ப கால வளர்ச்சிக்குப் பொறுப்பான கருப்பையை முழுமையாக அல்லது பகுதியளவில் அகற்றும் ஒரு அறுவை சிகிச்சையாகும். இது முழுமையான கருப்பை நீக்கம் மற்றும் தீவிர கருப்பை நீக்கம் என இருவகைப்படும். புற்றுநோய் போன்ற தீவிர நிலைகளில், கருப்பை மட்டுமின்றி சுற்றியுள்ள திசுக்களும் அகற்றப்படும். இந்த அறுவைச் சிகிச்சை சில சமயங்களில் உயிரைக் காப்பாற்றக்கூடியதாக இருந்தாலும், அதன் பக்க விளைவுகள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பின்னரே முடிவெடுக்க நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்பு, மருந்துகள், மனநிலை ஆலோசனை போன்றவை ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும், நல்ல வாழ்க்கைத்தரத்திற்கும் முக்கியம். இந்த அறுவை சிகிச்சை செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றியும் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
பக்க விளைவுகள்
மெனோபாஸ் முதல் ஆஸ்டியோபோரோசிஸ் வரை:
மாதவிடாய் முன்கூட்டியே நிறைவு (மெனோபாஸ்): கருப்பை அகற்றிய பின், ஓவாரிகளும் அகற்றப்பட்டால், பெண்களுக்கு திடீர் ஹார்மோனியல் மாற்றங்கள் ஏற்பட்டு, சீக்கிரமாகவே மெனோபாஸ் அறிகுறிகள் உருவாகலாம். மனநிலை மாற்றங்கள்: மனச்சோர்வு, பதட்டம் போன்ற மனநிலை பிரச்சனைகள் சில பெண்களில் பாதிக்கப்படலாம். பாலியல் மாற்றங்கள்: சிலர் பாலுறவில் ஆர்வமின்மை, வறட்சி மற்றும் வலி போன்ற குறைகளை சந்திக்கலாம். இடுப்பு உறுப்பு சரிவு: அறுவைச் சிகிச்சைக்கு பின், இடுப்பு உறுப்புகள் இடம் மாறும் நிலை உருவாகலாம். சிறுநீர் பிரச்சனைகள்:சிறுநீர் கட்டுப்படுத்த முடியாத நிலை அல்லது சிறுநீரை வெளியேற்றுதில் சிரமம் போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆஸ்டியோபோரோசிஸ்:ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் எலும்புகள் பலவீனமாவதைத் தூண்டும். இதய நோய் அபாயம்:கருப்பை அகற்றிய பெண்களில் இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்