மாத சம்பளதாரரா நீங்கள்.. அப்போ படிவம் 16-ப் பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
வருமான வரித் தாக்கல் செய்வது இந்திய மக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். அரசு குறிப்பிட்டிருக்கும் குறிப்பிட்ட அளவு வருமானத்திற்கும் மேல் வருடாந்திர வருவாய் ஈட்டும் அனைவரும் கண்டிப்பாகவும் சரியாகவும் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரித்தாக்கல் செய்யும் சம்பளதாரர்களுக்கு படிவும் 16 (Form 16) மிகவும் முக்கியமான ஒரு ஆவணம். குறிப்பிட்ட நிதியாண்டில் எவ்வளவு ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தனிநபரால் எவ்வளவு வருவாய் ஈட்டப்பட்டிருக்கிறது, அதில் எவ்வளவு வரிப்பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது உள்ளிட்ட தகவல்களைக் கொண்டிருக்கும் ஆவணமே படிவம் 16. இதனை வணிக நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு குறிப்பிட்ட நிதியாண்டைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் 15-ம் தேதிக்குள் வழங்கும்.
படிவம் 16 ஏன் முக்கியம்?
படிவம் 16-ல் அந்தக் குறிப்பிட்ட ஊழியரின் பெயர், பான் எண், நிறுவனத்தின் பெயர், பான் எண், ஈட்டப்பட்ட வருவாய், பிடித்தம் செய்யப்பட்ட வரி மற்றும் இதர தகவல்கள் இடம்பெற்றிருக்கும். ஒரு சம்பளதாரருக்கு வரிபிடித்தம் செய்யக்கூடிய வருவாயை கணக்கிடுவதற்கும் படிவம் 16 மிகவும் முக்கியம். படிவம் 16 இல்லாமல் ஒரு சம்பளதாரர் சரியான தகவல்களுடன் வருமான வரித்தாக்கல் செய்ய முடியாது. இதன் காரணமாக அபராதமும், சட்ட சிக்கல்களும் நேரலாம். மேலும், வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களில் கடன் அல்லது கடன் அட்டை வேண்டும் என்றால் குறிப்பிட்ட நிறுவனங்கள் படிவம் 16-யே நிலையான ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றன. வருமான வரித்தாக்கலுக்கு மட்டுமல்லாது, பிற தேவைகளுக்காகவும் படிவம் 16-ஐ பயன்படுத்த முடியும், எனவே பத்திரமாக வைக்கவேண்டும்.