இந்தியாவில் பறவைக் காய்ச்சலால் மீண்டும் ஒரு மனிதருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தது WHO
இந்தியாவில் நான்கு வயது குழந்தைக்கு H9N2 வைரஸால் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரியில், கடுமையான சுவாசப் பிரச்சினைகள், அதிக காய்ச்சல் மற்றும் வயிற்றுப் பிடிப்புகள் காரணமாக அந்த நான்கு வயது குழந்தை உள்ளூர் மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டது. மேலும், நோயறிதல் மற்றும் சிகிச்சையின் பின்னர் அந்த குழந்தை மூன்று மாதங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டது என்று WHO தெரிவித்துள்ளது. அந்த குழந்தை வாழ்ந்து வந்த வீட்டிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கோழிப்பண்ணை இருந்தது பின்பு கண்டுபிடிக்கப்பட்டது.
2019 இல் முதல் முறையாக இந்தியாவில் ஏற்பட்ட H9N2 பாதிப்பு
ஆனால், அந்த குழந்தையின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் யாருக்கும் சுவாச நோயின் அறிகுறிகள் இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வைரஸ் தடுப்பு சிகிச்சையின் விவரங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இது இந்தியாவில் பதிவு செய்யப்படும் H9N2 பறவைக் காய்ச்சலின் இரண்டாவது மனித நோய்த்தொற்று ஆகும். 2019 இல் முதல் முறையாக இந்தியாவில் ஒருவருக்கு H9N2 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்று WHO தெரிவித்துள்ளது. பொதுவாக லேசான நோயை உண்டாக்கக்கூடியது இந்த வைரஸ் என்றாலும், பல்வேறு பகுதிகளில் கோழிப்பண்ணை இருக்கும் இடங்களில் பரவி வரும் இந்த பறவைக் காய்ச்சலால், மேலும் ஆங்காங்கே மனித வழக்குகள் ஏற்படலாம் என்று ஐக்கிய நாடுகளின் நிறுவனம் கூறியுள்ளது.