அஞ்சல் நிலையங்களா? வங்கிகளா? எங்கு நிரந்தர வைப்புநிதி கணக்கு தொடங்குவது?
சந்தை ஏற்றஇறக்கங்களுக்கு மத்தியில் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய வேண்டும் என நிரந்தர வைப்புநிதி திட்டங்களில் தங்களது பணத்தை முதலீடு செய்கின்றனர் மக்கள். வங்கிகள் நிரந்தர வைப்புநிதி திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தும் வேளையில், தபால் அலுவலகங்களும், வங்கியின் நிரந்தர வைப்பநிதி திட்டங்களைப் போலவே கால வைப்புநிதி திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. எதில் முதலீடு செய்வது? அரசுத் திட்டங்கள்: அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் வைப்புநிதி திட்டங்கள் அரசால் வழங்கப்படுபவை. எனவே, அதன் வட்டி விகிதங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்படாமல் கொஞசம் நிலையாக இருக்கும். முதலீடு செய்வதில் பாதுகாப்பு: வங்கிகளில் நாம் முதலீடு செய்வதில் ரூ.5 லட்சம் வரை மட்டுமே காப்பீடு செய்யப்பட்டிருக்கும். ஆனால், அஞ்சல் அலுவலகங்களில் நம் மொத்த முதலீடும் பாதுகாப்பாக இருக்கும்.
வட்டி விகிதம்:
அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் வைப்புநிதி திட்டங்களில், 1, 2, 3 மற்றும் 5 வருடத் திட்டங்களுக்கு, முறையே 6.8%, 6.9%, 7.0% மற்றும் 7.5% வட்டி வழங்கப்படுகிறது. ஆனால், வங்கியில் குறிப்பிட்ட வங்கிக்கு ஏற்ற வகையில் 3% முதல் 7.1% வரை வட்டி விகிதம் மாறுபடும். கால அளவு: வங்கிகளில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவில் நிரந்தர வைப்புநிதி திட்டங்கள் இருக்கின்றன. அஞ்சல் நிலையங்களில் 1, 2, 3 மற்றும் 5 வருட கால அளவுகளில் மட்டுமே கால வைப்புநிதி திட்டங்கள் இருக்கின்றன. வரி நன்மைகள்: 5 வருடங்கள் வரை முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் இரண்டிலும் ரூ.1.5 லட்சம் வரை வரி நன்மைகள் உண்டு.