பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா?
பகலில் தூங்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. ஆனால், இது நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லதா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? பல்வேறு ஆய்வுகளின் படி, மதியம் ஒரு குட்டி தூக்கம் போடுவது நம் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால், அதுவே அளவுக்கு மீறினால் நஞ்சு தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அப்படி அளவுக்கு மீறி தூங்கினால், நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற நோய்கள் வர வாய்ப்பு இருக்கிறதாம். முக்கியமாக, முதியவர்கள் 1 மணி நேரத்திற்கு மேல் மதியம் தூங்கினால் அது அவர்களது அறிவாற்றலை வெகுவாக பாதிக்கும் என்கிறது அமெரிக்க முதியோர் சங்கத்தின் ஜர்னல்.
பகல் தூக்கத்திற்கான அறிவுரைகள்:
இரவு சரியாகத் தூக்கம் வராமல் கஷ்டப்படுபவர்கள் மதியம் ஒரு குட்டி தூக்கம் போடுவது அவர்களுக்கு மிகவும் நல்லது என்கிறார் குருகிராம் ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் விபுல் குப்தா. இது அவர்களைப் புத்துணர்வு அடைய செய்வதுடன் அவர்களது சிந்தனையையும் தெளிவடைய செய்கிறதாம். மேலும், மதியம் தூங்குவது தவறல்ல ஆனால் அது நம் இரவு ஓய்வைக் கெடுத்துவிடமால் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறார் இந்த டாக்டர். நிபுணர்களின் வழிகாட்டுதலின் படி, நாம் தினமும் மதியம் 15-20 நிமிடங்கள் ஓய்வெடுத்து கொள்வது நல்லது. முடிந்தால், மதிய உணவிற்கு முன்பே தூங்கி எழுந்துவிட வேண்டுமாம். இல்லை, அதுவே நம் இரவு உறக்கத்தைக் கெடுத்துவிடுமாம்.