உங்கள் சருமத்தில் தென்படும் நீரிழிவு நோயின் எச்சரிக்கை அறிகுறிகள்
நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர், தோல் புண்கள் அல்லது கால் வெடிப்பு போன்ற தோல் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நீரிழிவு, தோலைப் பாதிக்கும் போது, பொதுவாக உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதற்கான அறிகுறியாகும். இது, உங்களுக்கு கண்டறியப்படாத நீரிழிவு நோய் அல்லது ப்ரீ-டயாபட்டீஸ் அல்லது உங்கள் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை முறையில் மாற்றம் தேவை என்று அர்த்தம். உங்கள் தோலில் ஏதேனும் எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டால், உடனே மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம். மஞ்சள், சிவப்பு அல்லது பழுப்பு நிற திட்டுகள் உங்கள் சருமத்தில் தோன்றினால் கவனமாக இருக்கவும். பாதிக்கப்பட்ட பகுதியில் பளபளப்பான சருமம் மற்றும் இரத்த நாளங்கள் தெரியும். மேலும் அந்த இடத்தில் அரிப்பு மற்றும் வலி தோன்றலாம்.
நீரிழிவு நோய் இருந்தால், சருமம் வறண்டு போகும்
நீரழிவு நோய் ஏற்பட்டால், உங்கள் சருமத்தில் குறிப்பாக தாடைகளில் புள்ளிகள் தோன்றும். அரிதாக, கைகள், தொடைகள் அல்லது பிற உடல் பாகங்களிலும் தோன்றும். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், சருமம் வறண்டு போகும் அபாயம் அதிகம். அதற்கு காரணம், உயர் இரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதனால் சரும வறட்சி ஏற்படும். உங்கள் கழுத்தின் பின்புறம், அக்குள், இடுப்பு அல்லது பிற பகுதிகளில் ஒரு கருமையான பேட்ச் அல்லது தோல் பட்டையை நீங்கள் கவனித்தால், அது உங்கள் இரத்தத்தில் அதிக இன்சுலின் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த தோல் நிலை பெரும்பாலும் நீரிழிவு நோயுடன் தொடர்புடையது. அரிதாக இருந்தாலும், நீரிழிவு நோயாளிகள் தங்கள் தோலில் திடீரென கொப்புளங்கள் தோன்றுவதைக் காணலாம்.