ஆய்வகங்களில் உருவாக்கப்படும் இறைச்சியை விற்பனை செய்ய அனுமதியளித்தது அமெரிக்கா
ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சியை விற்பனை செய்ய அனுமதி அளித்திருக்கிறது அமெரிக்கா. அந்நாட்டைச் சேர்ந்த அப்சைடு ஃபுட்ஸ் மற்றும் குட் மீட் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இதற்கான அனுமதியை அளித்திருக்கிறது அந்நாட்டு விவசாயத் துறை. இறைச்சி எப்படி ஆய்வகத்தில் உருவாக்கப்படுகிறது? உயிருள்ள விலங்குகளின் திசுக்களில் இருந்து செல்கள் முதலில் பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்த செயல்முறையானது அந்த விலங்குகளை காயப்படுத்தாமல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த செல்களானது ஒரு பெரிய கொள்கலனில் அடைக்கப்பட்டு, அவற்றுக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் புரதங்கள் அளிக்கப்படுகிறது. அதனை எடுத்துக் கொண்டு இறைச்சியாக வளர்ச்சியடைகின்றன அந்த செல்கள். வளர்ந்த அந்த இறைச்சியானது கொள்கலனில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு சரியான முறையில் பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படவிருக்கிறது.
இதனால் உடல் நலன் பாதிக்கப்படுமா?
ஆய்வகங்களில் உருவாக்கப்படும் இந்த இறைச்சியானது, தற்போது சந்தையில் கிடைக்கக்கூடிய இறைச்சியை விட கூடுதலான விலையிலேயே விற்பனை செய்ய முடியும். ஆனால், அதிக அளவில் இவை தயாரிக்கப்படும் போது இவற்றின் விலையையும் குறைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன இதனை உருவாக்கி வரும் நிறுவனங்கள். மேலும், அடுத்த ஐந்து முதல் பதினைந்து வருடங்களில் சாதாரண இறைச்சியின் விலையில் இந்த ஆய்வக இறைச்சியை விற்பனை செய்ய முடியும் எனத் தெரிவித்திருக்கின்றனர். 2019-ம் ஆண்டு முதலே இந்த ஆய்வக இறைச்சியின் உருவாக்கத்தை தொடர்ந்து பரிசோதனை செய்து வந்திருக்கிறது அமெரிக்காவின் உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம். இந்த இறைச்சியை உட்கொள்வதால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என உறுதியான பிறகே தற்போது விற்பனைக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.