LOADING...
இனி ஆன்லைனில் ஜங்க் ஃபுட் விளம்பரம் கிடையாது; குழந்தைகளைக் காக்க பிரிட்டன் அதிரடி முடிவு
ஆன்லைனில் ஜங்க் ஃபுட் விளம்பரத்திற்கு பிரிட்டன் அரசு தடை

இனி ஆன்லைனில் ஜங்க் ஃபுட் விளம்பரம் கிடையாது; குழந்தைகளைக் காக்க பிரிட்டன் அதிரடி முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Jan 09, 2026
05:14 pm

செய்தி முன்னோட்டம்

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பிரிட்டன் அரசு ஜங்க் ஃபுட் எனப்படும் ஆரோக்கியமற்ற உணவுகளின் விளம்பரங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆன்லைன் தளங்களில் இத்தகைய விளம்பரங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நேரத்திலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளின் விளம்பரங்களை ஆன்லைன் தளங்களில் இனி எக்காரணம் கொண்டும் ஒளிபரப்ப முடியாது. தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை, இரவு 9 மணிக்கு முன்னதாக இத்தகைய விளம்பரங்களைக் காட்டக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைகள் அதிகளவில் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைத் தவிர்த்து, அவர்கள் உறங்கச் சென்ற பிறகு மட்டுமே இத்தகைய விளம்பரங்களை ஒளிபரப்ப பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.

அச்சுறுத்தல்

குழந்தை பருவ உடல் பருமன் ஒரு பெரும் அச்சுறுத்தல்

பிரிட்டனில் உள்ள குழந்தைகளில் கணிசமானோர் அதிக உடல் எடையுடன் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்காலத்தில் அவர்களுக்கு நீரிழிவு, இதய நோய்கள் போன்ற தீவிர ஆரோக்கியப் பிரச்சினைகளை உருவாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். விளம்பரங்களின் மூலம் ஈர்க்கப்பட்டு குழந்தைகள் அதிகளவில் நொறுக்குத் தீனிகளை உண்பதைத் தடுப்பதே இந்தத் தடையின் முதன்மை நோக்கமாகும். அரசின் இந்த முடிவிற்குப் பொதுநல அமைப்புகள் மற்றும் மருத்துவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விளம்பரத் துறையினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் தடை தங்களின் வருவாயைப் பாதிக்கும் எனக் கூறும் அவர்கள், மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றக் கல்வி முறையிலேயே மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement