cost of living crisis: வாழ்க்கைச் செலவு நெருக்கடி குறித்த கவலையா? இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உதவும்
'Cost of living' அல்லது வாழ்க்கை செலவு நெருக்கடி என்பது உலகின் பல்வேறு இடங்களில் நிலவும் சூழல். உணவு, அடிப்படை வீட்டுப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலைகள் உயரும்போது, மக்கள் தங்களுக்கு தேவையான செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். வாழ்க்கை செலவு நெருக்கடியும், பண வீக்கமும் ஒன்றோடொன்று தொடர்புடையது. உதாரணமாக பணவீக்கத்தினால், அன்றாட பொருட்களின் விலை கூடினாலும்,உங்கள் சம்பளம் உயரவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கை செலவு நெருக்கடியை எதிர்கொள்வீர்கள். இந்த சூழலை எதிர்கொள்ள, சில குறிப்புகள் இதோ: சேமிப்பு மற்றும் செலவுகளைக் கணக்கிடுங்கள். இது உங்கள் செலவுகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், எதற்கு, எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்பதை அறியவும் உதவும். உங்களின் உண்மையான நிதிநிலையைப் பார்த்து, அதற்கேற்ப திட்டமிடுவதால், மனஅழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
சிறிய பங்களிப்புகள், பெரிய வழிகளில் உதவும்
செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருங்கள். இந்த நெருக்கடி உலகம் முழுவதும் தற்போது நிலவி உள்ளது. அதனால், ஊடக செய்திகளை கண்டு பயப்பட வேண்டியதில்லை. உங்கள் நிலைமையை மட்டும் நீங்கள் எதிர்கொண்டால் போதுமானது. உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது நலம் விரும்பிகளுடன் அமர்ந்து திட்டமிடுங்கள். இந்த நேரத்தில் தேவையான ஒரு விஷயம், ஒருவருக்கொருவர் பகிர்தல். கார்பூலிங்,உணவைப் பகிர்வது போன்ற சிறிய பங்களிப்புகள், பெரிய வழிகளில் உதவும். பிரயோஜனமான விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். அலைபாயும் மனமே, மனஅழுத்தத்திற்கு முக்கிய காரணம். அதனால், மனதை அமைதிப்படுத்தும் செயல்களில், பொழுதுபோக்கு விஷயங்களில் அவ்வப்போது ஈடுபடுங்கள்.