மாணவர்களின் நலனுக்காக பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க இங்கிலாந்து முடிவு
மாணவர்களின் நடத்தை மற்றும் கவனத்தை மேம்படுத்துவதற்காக அனைத்து பள்ளிகளிலும் மொபைல் போன்கள் பயன்படுத்துவதை தடை செய்ய இங்கிலாந்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வகுப்பறைகளில் இடையூறுகளைக் குறைப்பதற்காகவும் மாணவர்களின் நடத்தையை மேம்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது, "பள்ளிகள் குழந்தைகள் கற்கும் இடங்களாகும். ஆனால், மொபைல் போன்கள் வகுப்பறையில் தேவையற்ற கவனச்சிதறலை ஏற்படுத்துகிறது. மொபைல் போன்களை தடை செய்வதன் மூலம் கடின உழைப்பாளிகளான ஆசிரியர்கள் மாணவர்களின் நடத்தையில் கவனம் செலுத்த முடியும்." என்று கல்வித்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தடையை அமல்படுத்துவதற்கு நான்கு வெவ்வேறு யோசனைகள்
இங்கிலாந்து முழுவதும் உள்ள அனைத்து வகுப்பறைகளும் ஒரே விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதலை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. "பாடம் கற்பிக்கும் போது மட்டுமல்ல, இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களிலும் கூட மொபைல் போன்கள் தடை செய்யப்பட வேண்டும் " என்று அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. தடையை அமல்படுத்துவதற்கு நான்கு வெவ்வேறு வழிமுறைகளை கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது. முதலாவது யோசனை: மொபைல் போன்களை வீட்டிலேயே வைத்துவிட்டு பள்ளிக்கு வருவது. இரண்டாவது யோசனை: பள்ளிக்குள் நுழைவதற்கு முன் ஆசிரியர்களிடம் அவைகளை ஒப்படைப்பது. மூன்றாவது யோசனை: மொபைல் போன்களை சுவிட்ச் ஆப் செய்து பள்ளியின் பாதுகாப்பான சேமிப்பகத்தில் வைத்திருப்பது. நான்காவது யோசனை: கைகளில் மொபைல் போன்களை வைத்திருந்தாலும் அதை உபயோகிக்காமல் இருப்பது.