COVISHIELD தடுப்பூசியால் ஏற்படும் TTS என்றால் என்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான AstraZeneca, அதன் கோவிட்-19 தடுப்பூசியான கோவிஷீல்ட், த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS) எனப்படும் அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டுள்ளது. தடுப்பூசியுடன் தொடர்புடைய கடுமையான பக்கவிளைவுகள் மற்றும் இறப்புகளுக்காக குற்றம் சாட்டி, இந்நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, கோவிஷீல்ட், அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசி, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசி, கோவிட்-19 தொற்றுநோய்களின் போது இந்தியா முழுவதும் பரவலாக பலருக்கும் செலுத்தப்பட்டது.
TTS உடன்கூடிய இரத்த உறைவு என்றால் என்ன?
டி.டி.எஸ் என்பது ஒரு அரிதான நிலை. இதில் உடலில் இரத்தக் கட்டிகள் உருவாகின்றன. மேலும் இரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைகிறது. பிளேட்லெட்டுகள், இரத்தம் உறைவதற்கு உதவும் சிறிய செல்கள். எனவே அவை குறைவாக போவது, உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும். வக்ஸ்செவ்ரியா, கோவிஷீல்ட் மற்றும் ஜான்சன் & ஜான்சன்/ஜான்சன் கோவிட்-19 தடுப்பூசி போன்ற கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றவர்களிடம் இந்த நிலை காணப்பட்டது. இரத்த உறைதலில் ஈடுபடும் புரதத்தைத் தாக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குவதன் மூலம், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தடுப்பூசிக்கு எதிராக ரியாக்ட் செய்வதால் TTS ஏற்படுகிறது. TTSஇன் அறிகுறிகளில் கடுமையான தலைவலி, வயிற்று வலி, கால்களில் வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் அடங்கும்.