உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த சில எளிய வழிகள் இதோ
மனிதனின் நவரசங்களில் ஒன்றாக கருதப்படும் கோபம், சில சமயங்களில் எல்லை மீறி, மற்றவர்களை காயப்படுத்துவதோடு மட்டுமின்றி, சுய பாதிப்பும் நிகழும். அடிக்கடி கோபம் கொள்வதால், மனிதனின் மன ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்த சில வழிமுறைகளை பின்பற்றலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எண்களை எண்ணுங்கள்: இந்த அற்புதமான பயிற்சியை பலரும் சொல்ல கேட்டிருப்பீர்கள். எண்களை முன்னோக்கியோ, பின்னோக்கியோ எண்ணும் போது, உங்கள் கவனம் அதில் இருக்கும். அதனால் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, கோபம் தணியும். ஆழமாக சுவாசிக்கவும்: கோபத்தின் உச்சத்தில் இருக்கும் போது, உங்கள் மூச்சை ஆழமாக சுவாசிக்கவும். உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துவது, எப்போதும் நீங்கள் நிதானமாகவும், அமைதியாகவும் இருக்க உதவும்.
கோபத்தை கட்டுக்குள் வைக்க உதவும் தியானம்
காலார நடக்கலாம்: உங்கள் கோபத்தை தூண்டும் சூழ்நிலையிலிருந்து வெளியே சென்று, இயற்கையான சூழலில், காலார நடக்கலாம். அப்படி செய்யும்போது, உங்கள் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அது உங்கள் நரம்பு மண்டலத்தை சீர் செய்து, கோபத்தை குறைக்க உதவும். தியானம்: அடிக்கடி கோபப்படுவது, உங்கள் மனநிலையை பாதிக்கும். கோபம் வரும் வேளையில், அதிகம் பேசாமல், அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்து தியானம் செய்யலாம். அது மனதை ஒருநிலை படுத்தி, உங்கள் எதிர்மறை எண்ணங்களை தடுக்கிறது. இசை: 'கல்லையும் கனிய வைக்குமாம் இசை' என்ற சொல்லிற்கேற்ப, மனிதனின் மனநிலையை அமைதிகொள்ள வைக்கும் சக்தி, இசைக்கு உண்டு. கோபம் வரும் நேரத்தில், மென்மையான இசையை கேட்பதன் மூலம், உங்கள் மனதை சாந்தப்படுத்தலாம்.