காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள்
இன்று, தை 3 ஆம் நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கல் விழா. மக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கு செல்வது வாடிக்கை. அதனால், பொழுபோக்கு இடங்கள் அனைத்திலும் இன்று கூட்டம் நிரம்பி வழியும். அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு முழுவதிலும் சுற்றுலா தளங்களில், பாதுகாப்பை பலப்படுத்த, தமிழக காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக, மெரினா கடற்கரையில் குளிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் மட்டுமே, சுமார் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, 1000 ஊர்க்காவல் படையினரும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா தளங்களில் போலீஸார் குவிப்பு
குறிப்பாக, சென்னையில் உள்ள சுற்றுலா தளங்களான, கடற்கரைகள், கிண்டி மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கோவில்கள் அருகே, போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுமட்டுமின்றி, மாநிலம் முழுதும் உள்ள மற்ற பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களான, கன்னியாகுமரி, திருச்சி, காஞ்சிபுரம், மஹாபலிபுரம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களிலும் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காணும் பொங்கல் அன்று, மக்கள் கூட்டம் கூட்டமாக, சுற்றலா தலங்களுக்கு சென்று, நேரத்தை கழிப்பது வழக்கம். அதோடு நான்கு நாள் பொங்கல் விடுமுறையை கொண்டாடும் விதமாகவும், பல இடங்களுக்கு சுற்றுலா செல்வர். இந்த பொங்கல் விடுமுறை நாளில், இத்தகைய சுற்றுலா தளங்களில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் வண்ணம், கலை நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் நடைபெறுவதும் வழக்கம்.