பொங்கல் 2023 ஸ்பெஷல்: காணும் பொங்கல் பற்றி சில தகவல்கள்
நான்கு நாள் பண்டிகையாக, தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் பொங்கல் விழா, போகி பண்டிகையில் ஆரம்பித்து, காணும் பொங்கல் அன்று முடியும். பொங்கல், என்பது அறுவடைக் காலத்தின் கொண்டாட்டமாகும். ஆடி மாதத்தில், விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள், தை மாதத்தில், நல்ல விளைச்சலை தர வேண்டியும், முந்தைய மாதங்களில் நல்ல விளைச்சல் வந்ததற்காகவும், எடுக்கப்படும் விழா. மக்கள், தங்களுக்கு நலனிற்கு உதவிய பூமி தாய்க்கும், இயற்கை தாய்க்கும், மற்றும் விளைச்சலுக்கு உதவிய பண்ணை விலங்குகளுக்கும் நன்றி கூறி, வணங்குவர். இவ்விழாவின் துவக்க நாளில், மக்கள், வீட்டை சுத்தம் செய்து, வீட்டின் முகப்பில் மாவிலைத் தோரணம் கட்டி, கூரை பூ வைத்து அலங்கரிப்பர். வாசலில் வண்ண கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபாட்டை துவங்குவார்கள்.
காணும் பொங்கல் சிறப்புகள்
தை 3 ஆம் நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கல் விழாவன்று, மக்கள் தங்கள் குடும்பத்துடன் உற்றார் உறவினரை காண செல்வார்கள். இந்த விழாவிற்கு இரண்டு பெயர் காரணங்கள் உண்டு. 3 நாள் விழா முடிந்து, சொந்தங்களோடு சுற்றத்தாரோடும் கொண்டாடும் பொங்கல் என்பதால் காணும் பொங்கல் என்று பெயர் எனவும் கூறுவர். மற்றொரு புறம், கன்னி பெண்கள், புதுப்பானையில் பொங்கலிட்டு, தங்கள் தமையன் மார்களின் நலம் கருதி கடவுளை வணங்கும் நாள் என்றும் கூறுவர். கன்னி பொங்கல் தான், கால போக்கில் பெயர் மற்றம் அடைந்து காணும் பொங்கல் ஆகி விட்டதெனவும் கூறுவர் தற்போது, காணும் பொங்கலன்று, மக்கள், குழந்தைகளுடனும், சொந்தங்களுடனும் அருகில் இருக்கும் கடற்கரை, ஆற்றங்கரை அல்லது பொழுதுபோக்கும் இடங்களிற்கு செல்வார்கள்.