குறையும் திருமணங்கள்; சரியும் பிறப்பு விகிதம்; கவலையில் தென்கொரியா
வளர்ந்த நாடுகளில், பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த அறிக்கையில், கடந்த 50 ஆண்டுகளில், உலகம் முழுவதும் கருவுறுதல் விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது எனவும், 1952 ஆம் ஆண்டில், சராசரி உலகளாவிய குடும்பத்திற்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர்-இப்போது, அவர்களுக்கு மூன்றுக்கும் குறைவான குழந்தைகள் உள்ளனர் எனவும் தெரியவருகிறது. எனினும், கருவுறுதல் விகிதத்திற்கும், பிறப்பு விகிதத்திற்கும் இடையே வேறுபாடு உள்ளது. அதில், தற்போது வெளியான செய்திகள் படி, கடந்த ஆண்டில், தென் கொரியாவில் திருமணங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதனால், பிறப்பு விகிதமும் குறைந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. அதன்படி, "2022-இல் சுமார் 1,91,700 திருமணங்கள் நடந்தன. இது முந்தைய ஆண்டை விட 0.4% குறைவு" என்று தெரியவருகிறது.
குழந்தை பராமரிப்பிற்கு ஆகும் செலவினால், சரியும் குழந்தை பிறப்பு விகிதம்
உலக பொருளாதார மன்றத்தின் ஆய்வுகளின் படி, கடந்த 2020-ம் ஆண்டில்,உலகிலேயே குறைவான பிறப்பு விகிதம் கொண்ட நாடக தென்கொரியா இருந்துள்ளது. அதோடு, 2020 -இல், தென்கொரியாவில், இறப்பு விகிதமும் அதிகரித்து வந்தது. இதை தடுக்க அந்த நாட்டின் அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக, குழந்தை பராமரிப்பு செலவுகளை அரசே ஏற்பதாக அறிவித்தும் கூட, இன்றும், தென்கொரியாவில் திருமண விகிதமும், குழந்தை பிறப்பு விகிதமும் உயரவே இல்லை. உலக பொருளாதார மன்றத்தின் கூற்றுப்படி, உலகம் முழுவதும், கல்வி மற்றும் பணியிடத்தில் அதிகரிக்கும் பெண்கள் அதிகாரம், குறைந்த குழந்தை இறப்பு மற்றும் அதிகரிக்கும் குழந்தை வளர்ப்பு செலவு ஆகியவை, குழந்தை பெற்றுக்கொள்வதற்கான முடிவுகளில் பெரும் பங்கு வகிப்பதாக தெரிகிறது.