இதய நோய் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் அன்றாட உணவு வகைகள்
அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவு (UPF) என்ற கூறப்படும் உணவுகள் இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய், மனநல பாதிப்பு உள்ளிட்ட சுமார் 32 ஆரோக்கிய கேடுகளையும் தீங்கு விளைவிக்கும் நோய்களையும் உண்டாக்க வல்லது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. 10 மில்லியன் மக்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட 45 மெட்டா பகுப்பாய்வுகள் BMJ என்று இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது, அல்லது 'ரெடி டு ஈட்' லேபிள்களுடன் விற்கப்படும் உடனடி உணவுகளை உட்கொள்வது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?
"ஒட்டுமொத்தமாக, தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய், மனநோய், சுவாச நோய், இருதய நோய், இரைப்பை மற்றும் வளர்சிதை பிரச்சனைகள், உள்ளிட்ட 32 மருத்துவ பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று கண்டறியப்பட்டன." என்று BMJ இல் இந்த ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த், சிட்னி பல்கலைக்கழகம், பிரான்சில் உள்ள சோர்போன் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம் உட்பட பல முன்னணி நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக தீங்கு விளைவிக்கும் கூறுகள் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.