
சிக்கனுக்கு இணையான காளான் பெப்பர் வறுவல் செய்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி : உணவு என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடும் உணவு பிரியர்கள் பலர் உள்ளனர்.
ஆனால் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலானோர் இம்மாதம் முழுவதும் சைவ உணவுகளை மட்டுமே எடுத்து கொள்வார்கள்.
எனவே, அசைவ உணவுகளுக்கு ஈடாக சைவத்தில் உள்ள உணவுகளை நாம் இம்மாதம் விதவிதமாக சமைத்து ருசிக்கலாம்.
அதன்படி சிக்கனுக்கு இணையான காளான் பெப்பர் வறுவல் எப்படி செய்வது என்பதை தான் நாம் இந்த செய்திக்குறிப்பில் காணவுள்ளோம்
மசாலா
செய்ய தேவையான பொருட்கள்
காளான் - 1 பாக்கெட்
எண்ணெய் - தேவையான அளவு
மிளகு - 11/2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 3
பட்டை - சிறு துண்டு
கடுகு - 1/2 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
கா.மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சி.வெங்காயம் - 1 கப்
தக்காளி - 1
உப்பு - தே.அளவு
கறிவேப்பிலை
கொத்தமல்லி
செய்முறை
மிளகு மசாலா பொடி செய்முறை
அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் 11/2 டீஸ்பூன் மிளகு போட்டு குறைந்தளவிலான தீயில் வறுக்கவும்,
அதனையடுத்து அதோடு சீரகம் - 1 டீஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன், ஏலக்காய்-3, சிறு துண்டு பட்டை ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வறுக்கவும்.
வாசம் வரும் வரை நன்கு வறுத்த பின்னர் அதனை எடுத்து ஆற வைத்து பொடியாக அரைத்து எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
வறுவல்
செய்முறை விளக்கம்
உணவு குறிப்புகள் : அடுப்பில் ஒரு பேன் வைத்து அதில் 2 -3 டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காயவிடவும்.
எண்ணெய் சூடான பின்னர் அதில் 1/2 டீஸ்பூன் கடுகு சேர்த்து அது பொறிந்து வந்தப்பிறகு, 1 பிரியாணி இலையினை சேர்க்கவும்.
2 கா.மிளகாய் கிள்ளி போடாமல் முழுதாக போடவும்(இது வெறும் பிளேவர்க்காக மட்டுமே).
அதனையடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன் அளவு சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும்.
அதன்பிறகு அதில் நறுக்கிய சி.வெங்காயம் ஒரு கப் சேர்க்கவும். சி.வெங்காயம் இல்லையெனில் பெ.வெங்காயமும் பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளலாம்.
வெங்காயம் வதங்கி வரும் நிலையில், ஒரு நறுக்கிய தக்காளியையும் அதில் சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பினை சேர்த்துக்கொள்ளவும்.
ரெடி
சுவையான காளான் பெப்பர் வறுவல்
மேற்கூறிய பொருட்கள் அனைத்தும் வதங்கிய நிலையில், அதில் கறிவேப்பிலை சேர்த்து கொள்ளுங்கள்.
அதன் பின்னர் இந்த ரெசிபியின் மூலப்பொருளான ஒரு கப் காளானை நான்கு துண்டுகளாக வெட்டி இதில் சேர்க்கவும்.
அரைத்து வைத்துள்ள மிளகு மசாலா பொடியினையும் சேர்க்கவும்.
மசாலாவுடன் காளான் நன்கு ஒருசேர வதங்கி வரும்.
அந்த பதத்திற்கு பிறகு, அதில் காளான் மூழ்கி வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு வேக விடுங்கள்.
குறைந்தளவு தீயில் இதனை வேக விடுங்கள்.
இறுதியாக தண்ணீர் எல்லாம் வற்றி, எண்ணெய் பிரிந்து வந்த பிறகு, நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி வைக்கவும்.
அவ்வளவு தான், சுவையான மிளகு காளான் வறுவல் ரெடி.