புரட்டாசி ஸ்பெஷல்- வீட்டிலேயே செய்யலாம் மொறு மொறு சில்லி சப்பாத்தி
புரட்டாசி மாசம் என்றாலே பலரும் அசைவ உணவை தவிர்த்து விடுவார்கள். அவர்களுக்காகவே பல புதுமையான உணவு வகைகள் இப்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில் கடைகளில் நாம் விரும்பி சாப்பிடும் சில்லி புரோட்டா போல் வீட்டிலேயே சுவையான மொறு மொறு சில்லி சப்பாத்தி செய்யலாம். குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் இதை வைத்தால் கண்டிப்பாக அவர்கள் திரும்ப கொண்டு வர மாட்டார்கள். எப்போதாவது உங்கள் வீட்டில் சப்பாத்தி மீந்து போனால் இந்த ரெசிபியை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
5 சப்பாத்தி நல்லெண்ணெய் (தேவையான அளவு) 2 பெரிய வெங்காயம் 2 பச்சை மிளகாய் 2 தக்காளி 2 டீஸ்பூன் மிளகாய் தூள் 1 டீஸ்பூன் மல்லி தூள் 1 டீஸ்பூன் கரம் மசாலா 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன் பீசா சாஸ் 1 டீஸ்பூன் டொமேட்டோ கெட்சப் உப்பு(தேவையான அளவு) கறிவேப்பிலை (சிறிதளவு)
செய்முறை
சப்பாத்தியை ஒரே மாதிரியான துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னவற்றை ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் சில்லி சப்பாத்தி மொறுமொறுவென வர இது முக்கியமான சீக்ரெட். கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாயை சேர்க்கவும். பின்பு இரண்டு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். தக்காளி வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்க வேண்டும்.
செய்முறை
இஞ்சி பூண்டின் பச்சை வாசனை நீங்கிய பின், மிளகாய்த்தூள்(காரத்திற்கு ஏற்ப), ஒரு டீஸ்பூன் பீசா சாஸ், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் ஒரு டீஸ்பூன் டொமேட்டோ கெட்சப் சேர்க்கவும். மசாலாக்களை சேர்க்கும்போது அடுப்பை குறைந்த அனலில் வைப்பது அவசியம். அனைத்தையும் நன்கு கலந்து விட்ட பிறகு, பொரித்து வைத்துள்ள சப்பாத்தியை சேர்த்து நன்கு கலக்கவும். இரண்டு நிமிடத்திற்கு பின் சுவையான சில்லி சப்பாத்தி சாப்பிட தயாராகிவிடும். எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து விட்டு, வட்டமாக வெட்டிய பெரிய வெங்காயத்துடன் சேர்த்து பரிமாறலாம்.