புரட்டாசி மாத ஸ்பெஷல் : சுவையான பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி ?
Newsbytes-ன் புரட்டாசி மாத ஸ்பெஷல் உணவு குறிப்புகள் : புரட்டாசி மாதம் இந்தாண்டு செப்டம்பர் 18ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், அசைவ உணவு உண்பவர்களும் சைவ உணவுகளை மட்டும் அடுத்த ஒரு மாதத்திற்கு சாப்பிடுவர். அதனடிப்படையில் அவர்களது நாவிற்கு அசைவ உணவிற்கு ஈடாக சுவை சேர்க்க கூடிய சைவ உணவு வகைகளுள் ஒன்றான 'பன்னீர் பட்டர் மசாலா'வை எப்படி செய்வது என்பதை தான் நீங்கள் இந்த செய்தி குறிப்பில் காணவுள்ளீர்கள்.
செய்ய தேவையான பொருட்கள்
நான்கு பேர் கொண்ட குடும்பத்தினருக்கான அளவு, பன்னீர் - 200 கிராம் வெண்ணெய் - 3 டீஸ்பூன் தக்காளி - 150 கிராம் வெங்காயம் - 100 கிராம் பட்டை - 2 ஏலக்காய் - 2 பூண்டு - 10 பல் இஞ்சி - 1 துண்டு கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் தனி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
பன்னீர் பட்டர் மசாலா செய்முறை
பன்னீர் பட்டர் மசாலாவை செய்ய முதலில் அடுப்பில் ஒரு பேனை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர், அதில் 2 டீஸ்பூன் அளவு வெண்ணெய் போட்டு உருகிய பின்னர் நறுக்கிய வெங்காயத்தினை போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்க சிறிது உப்பினை சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் வெங்காயம் நன்கு வதங்கி கண்ணாடி போலான பதத்திற்கு வந்த பின்னர், அதில் வெட்டிய தக்காளியை போடுங்கள். அந்த தக்காளி சிறிது வதங்கிய பின்னர், அதில் எடுத்துவைத்த 10 பல் பூண்டு, 1 துண்டு இஞ்சி உள்ளிட்டவைகளையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதனை மூடிப்போட்டு மூடுங்கள். 2 நிமிடத்திற்கு பின்னர் அடுப்பை அனைத்து வதக்கிய பொருட்களை ஆறவைத்து, மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பன்னீரை துண்டு துண்டாக வெட்டி வைத்து இறுதியில் சேர்க்க வேண்டும்
இதனையடுத்து மீண்டும் அடுப்பில் அதே பேனை வைத்து 1/2 டீஸ்பூன் அளவு வெண்ணெய் விட்டு உருக்கி கொள்ளுங்கள். அதன்பின் அதில் 2 பட்டை, 2 ஏலக்காய் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் அதில் நாம் அரைத்து வைத்துள்ள பேஸ்டையும் போட்டு, 1/2 டீஸ்பூன் தனி மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக வதக்கவும். விரும்பினால் மூடி போட்டு மூடிவைத்தும் வதக்கி கொள்ளலாம். பச்சை வாடை போக வதங்கி வெண்ணெய் பிரிந்து வந்ததும், அதில் நாம் வெட்டி வைத்துள்ள பன்னீரை போட்டு மெதுவாக கிளறவும். வேகமாக கிளறினால் பன்னீர் துண்டுகள் தூள் தூளாகி விடும் என்பதால் மெதுவாக கையாள்வது அவசியம்.
வட இந்தியர்களையடுத்து தென்னிந்திய மக்களையும் தனது சுவையால் மயக்கிய பன்னீர்
இறுதியாக அதில் 1/2 டீஸ்பூன் வெண்ணெய் ஊற்றி, பொடிப்பொடியாக நறுக்கி வைத்த கஸ்தூரி மேத்தி அல்லது கொத்தமல்லி தழையை அதில் போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான், சுவையான பன்னீர் பட்டர் மசாலா ரெடி. இதனுடன் சப்பாத்தி வைத்து சாப்பிட்டால் சிக்கன் கிரேவி சுவைக்கே போட்டியாக இருக்கும். முதலில் இந்த பன்னீர் வட இந்தியாவில் பிரபலமடைந்தாலும் தற்போது தென்னிந்தியாவில் பன்னீர் சுவைக்கு என ஓர் கூட்டமே உள்ளது. மேலும் பன்னீரில் நிறைய ப்ரோட்டீன் சத்துக்கள் உள்ளது என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.