நண்பர்களுடன் கண்டிப்பாக செல்ல வேண்டிய குறைந்த பட்ஜெட் சுற்றுலா தலங்கள்
நண்பர்கள் தினத்தை தொடர்ந்து, நீண்ட விடுமுறைகளும் வருவதால், நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்று நம்மில் பலரும் முடிவு செய்திருப்போம். ஆனால், அப்படி சுற்றுலா போவது என்றாலும், நம்முடைய பட்ஜெட்டுக்குள் அது இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.ஆகவே தான், குறைந்த பட்ஜெட்டுக்குள் வரும் சிறந்த சுற்றுலா தலங்களின் பட்டியலை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். அது என்னென்ன சுற்றுலா தலங்கள் என்பதை இப்போது பார்த்து விடலாம்.
ஆலப்புழா
'கிழக்கின் வெனிஸ்' என்று அழைக்கப்படும் கேரளாவின் ஆலப்புழா, பசுமையான கிராமப்புறங்கள், குளங்கள் மற்றும் நீர்வழி தடங்களுக்கு பிரபலமானது. படகு வீடுகளில் பயணம் செய்வது, படகுகளில் பயணம் செய்வது செய்வது போன்றவை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால் ஆழப்புழாவை 'மிஸ்' பண்ணிடாதீங்க! அது போக, இது போன்ற படகு பயணங்களில் கிடைக்கும் சுவையான தேங்காய் கலந்த கடல் உணவுகளை உண்பதற்காக ஆழப்புழாவிற்கு செல்பவர்களும் அதிகம்.
கோவா
கோவாவுக்கு ஒருமுறையாவது சென்றுவிட வேண்டும் என்பது தான் பல நண்பர்கள் கூட்டத்தின் கனவாக இருக்கிறது. அப்படிப்பட்ட கோவாவில் பார்ப்பதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும், அதுவும் குறைந்த பட்ஜெட் பயணங்களிலேயே வருகிறது. எனினும், நாம் தேர்ந்தெடுக்கும் தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களை பொறுத்து செலவும் மாறுபடும். கடற்கரைகள், போர்த்துகீசிய கட்டிடக்கலை, கோட்டைகள், உள்ளூர் சந்தைகள் மற்றும் பனை மரங்கள் நிறைந்த ஒரு கடற்கரை சொர்க்கம் தான் இந்த கோவா!
பாண்டிச்சேரி
பல லட்ச ரூபாய் செலவு செய்து பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கு பதிலாக, பிரெஞ்சு அனுபவத்தை நம்ம ஊரிலேயே பெறலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? முன்பு, பிரெஞ்சு காலனியாக இருந்த இந்த பாண்டிச்சேரியில், அனைத்து பிரெஞ்சு உணவுகளும் கிடைக்கும். அதோடு, இந்த பகுதிகளில் பல பிரெஞ்சுகாரர்களும் தற்போது வரை வசித்து வருகின்றனர். அது போக, பாண்டிச்சேரியில் உள்ள தெருக்களும் கஃபேகளும் போட்டோகிராபிக்காகவே வடிவமைக்கப்பட்டது போல் இருப்பதால், பலரும் இன்ஸ்டாகிராமில் அழகாக போட்டோ போடுவதற்காகவே இங்கு செல்கின்றனர். பாண்டிச்சேரிக்கு செல்லும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சைக்கிள் அல்லது பைக்கை வாடகைக்கு எடுத்து கொண்டு , சொந்தமாக சுற்றி பார்ப்பதை அதிகமாக விரும்புகின்றனர்.
கோகர்ணா
மங்களூருக்கு அருகில் உள்ள கோகர்ணாவில் அமைந்திருக்கும் ஓம் கடற்கரையை நிறைய பேர் 'குட்டி கோவா' என்று அழைக்கிறார்கள். ஏனென்றால், கோவாவில் இருக்கும் அத்தனை இயற்கை அழகும் இந்த பகுதியிலும் இருக்கிறது. ஆனால், இங்கு கோவாவில் இருக்கும் அளவு கூட்டம் இருக்காது என்பது இதன் இன்னொரு பிளஸ் பாயிண்ட்! கோகர்ணாவில் மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடி படகுகளில் பயணம் செய்யலாம். அது போக, நிறைய தண்ணீர் கேம்களும் இங்கு சுற்றுலா பயணிகளுக்காக நடத்தப்படுகிறது.
மூணாறு
இயற்கையின் முழு அழகையும் பார்த்து ரசிக்க ஒரு அமைதியான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்பும் நகரவாசிகளுக்கு ஏற்ற ஒரு இடம் மூணாறு ஆகும். சுத்தமான காற்று, புத்துணர்ச்சியூட்டும் தேயிலை தோட்டங்களின் நறுமணம் மற்றும் மூணாரின் மலைப்பகுதிகளை பார்த்தாலே பலரது கஷ்டமும் பறந்து போய்விடும். அதுவும், கொச்சி வழியாக மூணாறுக்கு பயணம் செய்தால் வழியில் இருக்கும் யானைகள் பயிற்சி மையத்திற்கும் சென்று பார்வையிடலாம். அது போக, மூணாறில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்கா மற்றும் ராஜ்மலா மலைகளில் ட்ரெக்கிங்கும் செய்யலாம்.