
PCOS விழிப்புணர்வு மாதம் 2025: பெண்கள் மட்டுமல்ல அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
செய்தி முன்னோட்டம்
செப்டம்பர் மாதம் பிசிஓஎஸ் (PCOS) விழிப்புணர்வு மாதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கருவுறும் வயதிலுள்ள பெண்களில் 10 பேரில் ஒருவரைப் பாதிக்கும் ஒரு பொதுவான மருத்துவ நிலை இது என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது. ஆனால், இவ்வளவு பரவலாக இருந்தபோதிலும், 70% வரையிலான பிசிஓஎஸ் பாதிப்புகள் கண்டறியப்படாமல் இருப்பதே இதன் மோசமான பக்கமாகும். இந்த நிலையில், இந்தப் பாதிப்பு குறித்து அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
அறிகுறிகள்
நோய் கண்டறிதல் மற்றும் அறிகுறிகள்
பிசிஓஎஸ் பொதுவாக மூன்று முக்கிய அறிகுறிகளில் குறைந்தது இரண்டு இருந்தால் கண்டறியப்படுகிறது. அவை பின்வருமாறு:- அதிகப்படியான ஆண் ஹார்மோன் (androgen) அளவுக்கான அறிகுறிகள்: முகத்தில் அல்லது உடலில் தேவையற்ற முடி வளர்ச்சி, தலைமுடி உதிர்தல், முகப்பரு அல்லது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் இரத்த அளவு அதிகரித்தல். ஒழுங்கற்ற அல்லது மாதவிடாய் இல்லாத நிலை: இது பிசிஓஎஸ்ஸின் ஒரு முக்கிய அறிகுறியாகும். ஃபாலிக்கிள் (follicle) வளர்ச்சி: அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் கருப்பையில் நீர்க்கட்டிகள் (cysts) இருப்பதை உறுதி செய்வது. இவை தவிர, இடுப்பு வலி, முகப்பரு, உடல் எடை அதிகரிப்பு, மற்றும் அதீத உடல் முடி வளர்ச்சி போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.
மேலாண்மை
நோய் மேலாண்மை மற்றும் ஆபத்துகள்
பிசிஓஎஸ் குணப்படுத்த முடியாத ஒரு வாழ்நாள் நிலை என்றாலும், அதன் அறிகுறிகளை வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள் மற்றும் பிற சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். ஒழுங்கற்ற மாதவிடாயைச் சீராக்க மருத்துவர்கள் கருத்தடை மாத்திரைகளை பரிந்துரைப்பதுண்டு. பிசிஓஎஸ் ஒரு வளர்சிதை மாற்றம் மற்றும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் குறைபாடு சம்பந்தப்பட்ட நோயாகும். இது டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், தூக்கத்தில் மூச்சுத்திணறல், மற்றும் சில வகை புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது. பிசிஓஎஸ் பாதித்த பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு 40 வயதிற்குள் டைப் 2 நீரிழிவு நோய் உருவாகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
கருவுறாமை
கருவுறாமை சிக்கலுக்கான முக்கிய காரணம்
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, பிசிஓஎஸ் கருவுறாமைக்கான ஒரு முக்கிய காரணமாகவும் உள்ளது. பிசிஓஎஸ்ஸின் சரியான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், குடும்பத்தில் பிசிஓஎஸ் அல்லது டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இந்த நிலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். உங்களுக்கு பிசிஓஎஸ் அறிகுறிகள் இருந்தால், சரியான நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்காக மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். சரியான விழிப்புணர்வு மற்றும் முன்கூட்டியே கண்டறிதல், பெண்கள் இந்த நோயை சரியாக கையாளவும், அதன் தொடர்புடைய உடல்நல அபாயங்களைக் குறைக்கவும் உதவும்.