அச்சுறுத்தும் நிபா வைரஸ்: அறிகுறிகளும், தற்காப்பு நடவடிக்கைகளும் என்ன
செய்தி முன்னோட்டம்
கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது.
இந்த வைரஸ் தொற்று மெதுவாகவே பரவும் எனவும், ஆனால் உயிரை காவு வாங்கக்கூடிய அளவிற்கு கொடியது எனவும் மத்திய அரசின் அதிகாரி இன்று அதிகாலை குறிப்பிட்டதை தொடர்ந்து பலரும் அச்சத்தில் உள்ளனர்.
கேரளா கோழிக்கோட்டில், இந்த வைரஸ் தொற்றால் இருவர் பலியாகியுள்ளனர், மேலும் ஒரு சிறுவன் உட்பட மேலும் நால்வருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, கேரளா-தமிழ்நாடு எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள், சோதனை சாவடிகள் நிறுவப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று எங்கிருந்து உருவானது? இதன் அறிகுறிகளும், இதிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி எனவும் தெரிந்து கொள்ளுங்கள்.
card 2
இந்தியாவின் முதல் நிபா வைரஸ் கோழிக்கோட்டில் தான் கண்டறியப்பட்டது
உலகின் முதல் நிபா வைரஸ் பாதிப்பு, 1999 ஆம் ஆண்டு மலேசியாவில் கண்டறியப்பட்டது.
ஆனால் இந்தியாவை பொருத்தவரையில், 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் தான் முதல் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
சுவாரசியமாக முதல் பாதிப்பு, அப்போதும் கோழிக்கோட்டில் தான் கண்டறியப்பட்டது.
அதன்பின் தற்போது வரை, நிபா வைரஸ் பாதிப்பு தெற்காசியாவில், குறிப்பாக இந்தியா மற்றும் பங்களாதேஷில் அதிகமாக இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
நிபா வைரஸ் குறிப்பாக, பன்றிகள் மற்றும் வௌவால் போன்ற விலங்குகளில் இருந்து மனிதனுக்குப் பரவுகிறது.
வௌவால் கடித்த பழங்கள், ஈ மொய்க்க கூடிய பழங்கள், உணவுகள் போன்றவற்றின் மூலம் மனிதனுக்கு பரவி, அதன்பின் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு உடல் திரவங்கள் மூலமாக எளிதாக பரவுகிறது.
card 3
நிபா வைரஸ் அறிகுறிகள்
இந்த வைரஸ் தொற்று சாதாரண காய்ச்சலாக தொடங்கி, பின்னாளில் மூளை சாவு ஏற்படும் அளவிற்கு தீவிரமாகும் என்பதால், ஆரம்பத்திலேயே இதற்கான சிகிச்சைகள் எடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் மத்திய அரசும் அறிவுறுத்துகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4 முதல் 14 நாட்களுக்குள் கீழ்கண்ட அறிகுறிகள் தோன்றினால், மருத்துவரை அணுகவும்.
நிபா வைரஸ் தொற்றின் அறிகுறிகள்:
காய்ச்சல்,
வாந்தி,
தொண்டை வலி,
தொண்டைப்புண்,
தலைவலி,
தசை வலி,
தலைசுற்றல்,
தூக்கமின்மை,
நினைவாற்றல் தடுமாற்றம்,
நரம்பியல் பிரச்சனைகள்
மூளை காய்ச்சல்
card 4
நிபா வைரஸ் கண்டறிவது எப்படி?
நிபா வைரஸ் ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சல் போலவே காணப்படுவதால், பலரும் இதன் வீரியத்தை புரிந்துகொள்வதில்லை.
ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் சுதாரிப்பதற்குள், உடலில் இந்த வைரஸ் ஆட்கொண்டுவிடுகிறது.
அதனால், காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவரை அணுகுவது அவசியம்.
சில மருத்துவ பரிசோதனைகள் மூலம், குறிப்பாக, ELISA மற்றும் (RT-PCR) பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே இது உறுதி செய்யப்படுகிறது.
card 5
தற்காப்பு நடவடிக்கைகள்:
நிபா வைரஸ் மனிதனுக்கும்-மனிதனுக்கும் எளிதில் பரவும் என்பதால், நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த வைரஸ் தொற்றிற்கு இதுவரை தடுப்பூசிகளோ, பிரத்யேக மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை.
அதனால் தனிமனித சுகாதாரம் மூலமாகவே ஒருவர் பாதுகாத்துக்கொள்ள முடியும். முடிந்த வரை கோவிட் தடுப்பு முறைகளை இதற்கும் பின்பற்றலாம்.
தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி நன்றாக சோப்புகளால் சுத்தம் செய்வது, முகக் கவசம் அணிவது போன்றவற்றை கடைபிடிக்கலாம்.