நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி பிற மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது?
இந்தியாவின் மிக முக்கிய இந்து பண்டிகையான நவராத்திரி, ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. வட கிழக்கு இந்தியாவில், அதாவது மேற்கு வங்கத்தை ஒட்டிய மாநிலங்களில் வாழும் மக்கள் பொதுவாக நவராத்திரியை துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். வட இந்தியா மற்றும் வட மேற்கு இந்தியாவில் நவராத்திரியின் போது கர்பா மற்றும் தாண்டியா ராஸ் போன்ற நடனங்களை ஆடி மக்கள் அந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்தியாவில் வாழும் பலர் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் சாத்வீக உணவுகளை உட்கொண்டு, விரதங்களைக் கடைப்பிடிக்கின்றனர். தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 'பதுகம்மா' என்ற சடங்குகளை நடத்தி மக்கள் பராசக்தியை வழிபடுகின்றனர். மலர்களை வைத்து கோலம் போன்ற அமைப்புகளை அமைப்பது தான் 'பதுகம்மா' என்று அழைக்கப்படுகிறது.
பதுகம்மாவில் இருந்து மைசூர் தசரா வரை
9 நாட்கள் முடிவடைந்ததும், அடுக்கி வைக்கப்பட்ட 'பதுகம்மா' மலர்களை பெண்கள் நீர்நிலைகளில் கரைத்து தங்கள் விரதத்தை முடிப்பார்கள். தமிழகத்தில் 9 படிகளில் கொலு பொம்மைகளை அடுக்கி நவராத்திரி விரதம் அனுசரிக்கப்படுகிறது. கேரளாவில், நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். நவராத்திரி முடிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் வரும் மஹாஷ்டமி அன்று மாலையில் 'பூஜை வைப்பு' என்ற சடங்கு கேரளாவில் பொதுவாக நடத்தப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் சரஸ்வதி பூஜையும், கடைசி நாள் 'பூஜை எடுப்பு' என்ற சடங்கும் நடத்தப்படுகிறது. கர்நாடகாவில் நவராத்திரியும் மைசூர் தசரா திருவிழாவும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது. கர்நாடக மக்கள் தங்கள் வீடுகளில் அழகாக அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளை வைத்து நவராத்திரியை கொண்டாடுகிறார்கள்.