ஜெருசலேம் தேவாலயத்தில் உள்ள 'அசையா ஏணி'யின் மர்மம் விலகியது
கிறிஸ்தவர்களின் புனித நகரத்தில் ஒன்றான ஜெருசலேம் நகரில் உள்ள 'The Church of the Holy Sepulchre' என்று அழைக்கப்படும் தேவாலயத்தில், ஒரு ஜன்னலுக்கு வெளிப்புறமாக, ஏணி ஒன்று கிட்டத்தட்ட 266 ஆண்டுகளாக அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது எதற்கு என பலகாலமாக புரியாத புதிராக இருந்து வந்த நேரத்தில், அதன் மர்மம் தற்போது விலகியுள்ளது. ஊடக செய்திகள் படி, அந்த ஏணி 1700களில் இருந்து அங்கு உள்ளது. மதப் பூசல்களை தவிர்க்கவே அந்த ஏணி அசையாமல், அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த தேவாலயத்தில் உள்ள எந்த பொருளுமே இருந்த இடத்தை விட்டு அசைக்கப்படவில்லை என்பது கூடுதல் செய்தி.
மதப்பூசல்களை தவிர்க்கவே இந்த விதி கடைபிடிக்கப்படுகிறது
அந்த காலத்தில், கிறிஸ்தவ குழுக்கள் பல இருந்தன. அவர்கள், இந்த தேவாலயத்தை தங்கள் கோட்பாடுகளுக்கு கீழ் கொண்டு வர முயற்சி செய்தனர். அதனால், ஒட்டோமான் பேரரசும்,ஐரோப்பிய நாடுகளும் இணைந்து இந்த தேவாலயம் அனைவருக்கும் பொது எனவும், இதில் இருக்கும் எந்த விஷயத்தை மாற்றவேண்டும் என்றாலும், கிறிஸ்தவ மதத்தின் பிரதானமான குழுக்களிடம் அனுமதி பெற்ற பிறகே செய்யவேண்டும் என விதி விதிக்கப்பட்டது. தற்போது, இந்த தேவாலயத்தின் மேற்கொள்ளப்படும் முடிவுகள், ஆறு குழுக்களின் ஒப்புதல் கிடைத்த பிறகே எடுக்கப்படுகின்றன. தேவாலயத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்ட ஒரு கொத்தனாருடையது இந்த மர ஏணி என்றும், அப்போதுதான் விதி அமலுக்கு வந்ததால், அவர் விட்டு சென்ற ஏணியை கூட யாரும் நகர்த்த முற்படவில்லை எனவும் கூறுகிறார்கள்.