காலாவதியாகிய காப்பீட்டுத் திட்டங்களை புதுப்பிக்க எல்ஐசியின் திட்டம்
இந்த செப்டம்பர் மாதம் தங்களுடைய 67வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC). இந்த ஆண்டுவிழாவை முன்னிட்டு, காலாவதியாகிய தனிநபர் காப்பீட்டுத் திட்டங்களைப் புதுப்பிக்க புதிய பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறது அந்நிறுவனம். காலாவதியாகிய காப்பீட்டுத் திட்டங்கள் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து விட்டு, பிறகு அதற்கான ப்ரீமியம்களை முறையாகச் செலுத்தாமல் கைவிடும் போது அது காலாவதியாகிய காப்பீட்டுத் திட்டமாகிறது. இந்தக் காலாவதியாகிய திட்டங்களைப் புதுப்பிக்க, நாம் செலுத்தாமல் விட்ட ப்ரீமியம் தொகையை எல்ஐசி குறிப்பிட்டிருக்கும் வட்டியுடன் செலுத்தி, நம்முடைய உடல் ஆரோக்கியச் சான்றுகளையும் வழங்க வேண்டும்.
காலாவதியாகிய காப்பீட்டுத் திட்டங்களில் எல்ஐசி-யின் விலக்குகள்:
காலாவதியாகிய காப்பீட்டுத் திட்டங்களிலும் சில விலக்குகளை வைத்திருக்கிறது எல்ஐசி. ஒரு நபர் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ப்ரீமியம் செலுத்திவிட்டு, பின்னர் அது காலாவதியாகி, முதல் ஆறு மாதங்களுக்குள் காப்பீட்டு நபர் உயிரிழக்கும் பட்சத்தில், செலுத்தபப்டாத ப்ரீமியம் தொகையைக் கழித்து விட்டு, காப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படும். இதுவே ஒரு நபர் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ப்ரீமியம் செலுத்தி, பின்னர் அது காலாவதியாகி, ப்ரீமியம் செலுத்தாமல் விட்ட மாதத்திலிருந்து 12 மாதங்களுக்குள் காப்பீட்டு நபர் உயிரிழந்திருந்தால், செலுத்தப்படாத ப்ரீமியம் தொகை வட்டியுடன் கழிக்கப்பட்டு, காப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படும். இந்தக் காலாவதியாகிய காப்பீட்டுத் திட்டம் குறித்த விலக்குகளை தங்களுடைய தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது எல்ஐசி நிறுவனம்.