2023 இல் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் இவை தான்
கொரோனாவிற்கு பிறகு, ஆன்லைன் உணவு ஆர்டர் அதிகரித்து உள்ளது. ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற செயலிகள், பொதுமக்களுக்கு ஆன்லைன் டெலிவரி வசதியை உருவாக்கி தருகிறது. இந்த நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளாக, இந்தியாவில் உள்ள ஆன்லைன் உணவின் தேர்வுகள் பற்றிய அறிக்கையை ஸ்விக்கி வழங்கி வருகிறது. இந்தாண்டு நிறைவு பெற சில நாட்களே உள்ள நிலையில், ஸ்விக்கி நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 'ஆண்டு ட்ரெண்ட்ஸ் அறிக்கை: எப்படி இந்தியா ஸ்விக்கி'd 2023' என்ற தலைப்பிட்டுள்ள அந்த அறிக்கையில், இந்தியர்கள் எந்தெந்த உணவுகளை அதிகம் ஆர்டர் செய்தார்கள், எவ்வளவு, எங்கிருந்து என சில சுவாரஸ்யமான உண்மைகளை கூறியுள்ளனர்.
6.6 மில்லியன் ஆர்டர்கள்
சென்றாண்டு, இந்தியா முழுவதும், ஸ்விக்கி செயலியின் மூலம் 6.6 மில்லியனுக்கும் அதிகமான உணவு ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன. ஜான்சி என்ற ஊரில் ஒரு பார்ட்டிக்காக, ஒரே ஆர்டரில் ஒரு பயனர் 269 பொருட்களை ஆர்டர் செய்திருந்தாராம். மும்பையை சேர்ந்த ஒரு பயனர், 42.3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவு ஆர்டர்களை செய்துள்ளார். இவர் தான் ஸ்விக்கி 'நட்சத்திர பயனர்' எனவும் கூறப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில், வாடிக்கையாளர் ஒருவர் 6 லட்ச ரூபாய்க்கு இட்லிகளை ஆர்டர் செய்துள்ளார். எனினும், தொடர்ந்து எட்டாவது ஆண்டாக, ஸ்விக்கி ஆர்டர்களில் முடிசூடா மன்னனாக இருப்பது பிரியாணி தான். வினாடிக்கு 2.5 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாம். காதலர் தினத்தின் போது, நாடு முழுவதிலிருந்தும் நிமிடத்திற்கு 271 கேக்குகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.