உலக பென்குயின் தினம்: இந்த அழகான கடற்பறவைகளைப் பற்றிய 5 சுவாரஸ்யமான தகவல்கள்
பென்குயின் மிகவும் அமைதியான, பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டான கடற்பறவை. கருப்பும், வெள்ளையும் கலந்த நிறத்தில், கூட்டம்கூட்டமாக வசிக்கும் இயல்புடையது. 'பறவை' என்று கூறப்பட்டாலும், இதனால் பறக்க முடியாது. உலகின் குளிர்ந்த பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. பொதுவாக மனிதனால் அதிகம் அண்டமுடியாத இடத்தில் இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக, அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவது, கவலை தரும் விஷயமே. அதனால், மக்களிடையே இதை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 அன்று, உலக பென்குயின் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது. இந்தநாளில், இந்த அழகிய பறவை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ: பெரும்பாலும் பூமியின் தெற்கு பகுதிகளில் உள்ள குளிர் பிரதேசங்களில் பென்குவின்களை அதிகம் காணலாம், குறிப்பாக அண்டார்டிகாவைச் சுற்றி அதிகம் வாழும்.
ஏக பத்தினி விரதம் இருக்குமாம் பென்குவின்
ஒவ்வொரு இனப்பெருக்க காலத்திலும், இந்த கடல் பறவைகள் ஒரு கூட்டாளரைக் கண்டுபிடித்து, அது முடியும் வரை அவர்களுக்கு விசுவாசமாக இருக்கும். ஆண் பென்குயின்கள், பெண் பென்குயின்களை கவர்வதற்காக கூழாங்கற்களை தந்து 'லவ் ப்ரொபோஸ்' செய்யுமாம். இனப்பெருக்க காலத்தில், ஆண் பென்குயின்கள், பெண்களை கவர்ந்திழுக்க, தங்களின் பெண் சகாக்களுக்குக் கொடுப்பதற்காக மென்மையான கூழாங்கற்கள் அல்லது பாறைகளைக் கண்டுபிடிக்கும் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபடுகின்றன. பெண் பென்குயின் விரும்பினால், அதை தங்கள் கூட்டில் சேர்த்து, இரண்டும் சேர்ந்து ஒரு கூழாங்கல் மேட்டை உருவாக்கி, அதில் முட்டைகளை இடும். பென்குவின் நீண்ட தூரம் நடப்பதற்கு ஏற்றது. அவற்றின் சில இனங்கள் கடல் பனியின் குறுக்கே, 60 மைல்கள் நடந்து தங்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அடையும்!