ஈகை திருநாள்: அதன் வரலாறும், அதை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்வோம்!
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள், புனித ரமலான் மாதம் முடிவடைவதை, ஈகை திருநாளாக கொண்டாடுவார்கள். ஈத் அல்லது ஈத் அல்-பித்ர் என்றும் அழைக்கப்படும் இந்த பண்டிகை, புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது. ரமலான் மாதம் முழுவதும், நோன்பு, தொழுகை என தீவிரமாக கடைபிடித்தபின்னர், இந்த நாளில், குடும்பத்தாருடன், விருந்து சமைத்து, பகிர்ந்தளித்து மகிழ்வர். ரம்ஜான் நோன்பின் போது, அவர்களுக்கு ஆரோக்கியத்தையும், வலிமையையும் வழங்கியதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவார்கள். புதிய ஆடைகளை அணிந்து கொண்டு, சுவையான உணவுகளை தயார் செய்து, ஏழைகளுக்கு வழங்கி உதவுவார்கள். ஈகை திருநாள், பொதுவாக இசுலாமிய நாட்காட்டியின் பத்தாவது மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில், பிறை தரிசனத்திற்குப் பிறகு கொண்டப்படுகிறது.
ஈத்-உல்-பித்ர் 2023 தேதி
இஸ்லாமிய மத குருக்களின் பார்வைக்கு, அமாவாசை பிறை எப்போது தென்படுகிறதோ, அப்போது தான் ஈத் கொண்டாடப்படும் என்பதால், ஈத்-உல்-பித்ர் வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. உதாரணமாக, இந்தியாவில், கேரளாவில் மட்டும், பிற பகுதிகளுக்கு ஒரு நாள் முன்னதாக கொண்டாடப்படுகிறது. ஏனெனில், அங்கு, சவூதி அரேபியாவில் எப்போது பிறையை காண்கிறார்களோ, அதையே பின்பற்றுகிறார்கள். மறுபுறம், காஷ்மீரில் ஈத்-உல்-பித்ர், கிராண்ட் முஃப்தியால் தீர்மானிக்கப்படுகிறது. அவர் பிறையை பார்க்கும் நேரங்களின் அடிப்படையில் பண்டிகையின் தொடக்கத்தை அறிவிப்பார். ஈத்-உல்-பித்ரை பிரார்த்தனைகளுடன் தொடங்கி, மக்கள் புதிய ஆடைகளை அணிந்து, ஏழைகளுக்கு ஜகாத் அல்லது அன்னதானம் வழங்குவார்கள். பின்னர் பிரியாணி, ஹலீம், நிஹாரி, கபாப்கள் மற்றும் செவியன் உட்பட பலவகையான உணவுகளை சமைத்து குடும்பத்துடன் கொண்டாடுவார்கள்.