உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2023: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்
ஆண்டுதோறும், மார்ச் 15ஆம் தேதி, உலக நுகர்வோர் உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. கன்ஸ்யூமர் இன்டர்நேஷனல் என்று அழைக்கப்படும், உலக நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை ஏற்பாடு செய்கிறது. இந்நாளில், நுகர்வோர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பிராண்டுகளின் மூலம் ஏமாற்றப்படுவதை தடுக்க, நுகர்வோர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது. அன்றாட வாழ்வில் தேவைப்படும், உணவு, காய்கறிகள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மற்றும் அதன் சேவைகள் என எண்ணற்ற பொருட்களை வாங்குவதால், நாம் அனைவருமே நுகர்வோர்கள் தான். எனினும், வர்த்தகர்கள், விற்பனையாளர்கள், தங்கள் லாபத்தை அதிகப்படுத்துவதற்காக, பொதுமக்களை ஏமாற்றுவது தவறு. அதை தடுப்பதே, இந்த நாளின் முக்கிய நோக்கம்.
உலக நுகர்வோர் தினத்தின் வரலாறு
உலக நுகர்வோர் உரிமைகள் தினம், 1983 இல் நடைமுறைக்கு வந்தது. அப்போதைய அமெரிக்கா ஜனாதிபதியான ஜான் F.கென்னடி, நுகர்வோர் உரிமைகள் குறித்து, அமெரிக்க காங்கிரஸில் உரை நிகழ்த்தினார். அந்த உரையில், நுகர்வோரின் நான்கு அடிப்படை உரிமைகள் -- பாதுகாப்பு உரிமை, தகவல் அறியும் உரிமை, தேர்வு செய்யும் உரிமை மற்றும் கேட்கும் உரிமை பற்றி பேசினார். அதை அடிப்படையாக கொண்டே, உலக நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு, ஆண்டுதோறும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும், நுகர்வோர் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த ஆண்டின், உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தின் கருப்பொருள், 'சுத்தமான ஆற்றல் மாற்றங்களின் மூலம் நுகர்வோரை மேம்படுத்துதல்' என்பதாகும்.