LOADING...
மருத்துவ வரலாற்றில் புதிய திருப்பம்! பார்கின்சன் மற்றும் இதய செயலிழப்பிற்கு உலகின் முதல் ஸ்டெம் செல் சிகிச்சை அறிமுகம்
பார்கின்சன் மற்றும் இதய செயலிழப்பிற்கு உலகின் முதல் ஸ்டெம் செல் சிகிச்சை அறிமுகம்

மருத்துவ வரலாற்றில் புதிய திருப்பம்! பார்கின்சன் மற்றும் இதய செயலிழப்பிற்கு உலகின் முதல் ஸ்டெம் செல் சிகிச்சை அறிமுகம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 06, 2026
07:39 pm

செய்தி முன்னோட்டம்

பார்கின்சன் நோய் மற்றும் கடுமையான இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய நம்பிக்கையூட்டும் வகையில், உலகின் முதல் 'iPS' ஸ்டெம் செல் சிகிச்சைகளுக்கு ஜப்பான் அரசு வெள்ளிக்கிழமை (மார்ச் 6) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் புரட்சிகரமான சிகிச்சைகள் இன்னும் சில மாதங்களில் நோயாளிகளுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

ஆம்செப்ரி

பார்கின்சன் நோய்க்கான 'ஆம்செப்ரி'

சுமிடோமோ பார்மா நிறுவனம் தயாரித்துள்ள 'ஆம்செப்ரி' என்ற சிகிச்சை முறைக்கு அனுமதி கிடைத்துள்ளது. ஆரோக்கியமான கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட iPS செல்கள், மூளையில் டோபமைனை உருவாக்கும் செல்களாக மாற்றப்பட்டு நோயாளியின் மூளையில் செலுத்தப்படும். கியோட்டோ பல்கலைக்கழகம் நடத்திய சோதனையில், இந்தச் சிகிச்சை பாதுகாப்பானது என்றும், நோயாளிகளின் உடல் இயக்கத்தில் முன்னேற்றம் தெரிவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதேபோல், இதய செயலிழப்பு சிகிச்சைக்காக 'குவோரிப்ஸ்' என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள 'இதய தசைத் தாள்கள்' முறைக்கும் சுகாதார அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது புதிய இரத்த நாளங்களை உருவாக்கவும், இதயத்தின் செயல்பாட்டை மீட்டெடுக்கவும் உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நோபல் பரிசு

ஷின்யா யமனாகாவின் நோபல் பரிசுப் பின்னணி

இந்தச் சிகிச்சைகளுக்கு அடிப்படையாக விளங்கும் iPS செல்கள் குறித்த ஆராய்ச்சிக்காக ஜப்பானிய விஞ்ஞானி ஷின்யா யமனாகா 2012 இல் நோபல் பரிசு பெற்றார். கருவில் இருந்து செல்களை எடுக்காமல், முதிர்ச்சியடைந்த செல்களிலிருந்தே எவ்வகை செல்லாகவும் மாறும் திறனை உருவாக்குவது இதன் சிறப்பம்சமாகும். உலகம் முழுவதும் சுமார் 10 மில்லியன் மக்கள் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுள்ள மருந்துகள் அறிகுறிகளைக் குறைக்க மட்டுமே உதவுகின்றன. ஆனால் இந்த ஸ்டெம் செல் சிகிச்சை நோயின் போக்கை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "இது ஜப்பான் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும்" என்று ஜப்பானிய சுகாதார அமைச்சர் கெனிச்சிரோ உவெனோ தெரிவித்துள்ளார்.

Advertisement