சர்வதேச தேநீர் தினம்: இந்தியாவில் அதிக விலையுள்ள டாப் 6 தேயிலை வகைகள்
செய்தி முன்னோட்டம்
தேநீர் என்பது இந்தியர்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்த ஒரு பானம். இருப்பினும், இந்தியாவில் அன்றாடப் பயன்பாட்டிற்கு அப்பாற்பட்டு, அரிதான மற்றும் பிரத்யேகமானச் சிலத் தேயிலை வகைகள் உள்ளன. அவை கைவினைத் தயாரிப்பு, பற்றாக்குறை மற்றும் ஏலத்தில் கிடைக்கும் அபரிமிதமான விலை காரணமாக ஆடம்பரப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. திங்கட்கிழமை (டிசம்பர் 15) சர்வதேசத் தேநீர் தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் தயாரிக்கப்படும் அதிக விலையுள்ள டாப் 6 தேயிலை வகைகளும், அவற்றின் தனிப்பட்ட சிறப்புகளும் இங்கே உங்களுக்காக:-
மனோஹரி கோல்ட்
அசாமின் மனோஹரி கோல்ட்
அசாமில் உற்பத்தி செய்யப்படும் இந்தக் 'கோல்டன் டிப்' (தங்க நுனி) ஆர்த்தடாக்ஸ் தேயிலை, ஏலச் சந்தையில் ஒரு வரலாறே படைத்துள்ளது. இதன் தங்க நிற நுனி இலைகள் மிகவும் அரிதானவை. இவை மிகச்சிறிய அளவில், கையால் மட்டுமேப் பறிக்கப்படுகின்றன. ஏலத்தில் சுமார் ₹99,999 வரை ஒரு கிலோவிற்கு விலை போகிறது. தனியார் விற்பனைகளில் இதைவிட அதிக விலைகள் பதிவாகியுள்ளன.
ஃபர்ஸ்ட் ஃப்ளஷ்
டார்ஜிலிங் ஃபர்ஸ்ட் ஃப்ளஷ்
டார்ஜிலிங் தேயிலைகளில், வசந்த காலத்தில் (மார்ச்-ஏப்ரல்) அறுவடை செய்யப்படும் முதல் கட்ட இலைகள் (First Flush) மிகவும் விலைமதிப்பு மிக்கவை. இவை அதன் மலர்த் தெளிவு (Floral Clarity) மற்றும் மென்மையானச் சுவைக்காக உலகளவில்ப் புகழ்பெற்றவை. இவை குறிப்பிட்ட எஸ்டேட்களில் மட்டுமேக் கிடைப்பதால், சேகரிப்பாளர்களால் மிகவும் தேடப்படுகின்றன. பிரீமியம் எஸ்டேட் தேயிலைகளுக்கு 100 கிராமுக்கு ₹800 முதல் ₹8,000 வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. அரிதான ஏலப் பங்குகள் இதைவிட அதிக விலைக்கு விற்கப்படும்.
சில்வர் டிப்ஸ்
மகாய்பாரி தோட்டத்தின் சில்வர் டிப்ஸ் இம்பீரியல்
டார்ஜிலிங்கின் மகாய்பாரி தோட்டத்திலிருந்து வரும் இந்தத் தேயிலை, அதன் அரிதான அறுவடை முறையால் ஒரு வழிபாட்டுப் பொருளாகக் கருதப்படுகிறது. இது பௌர்ணமி இரவுகளில் மிகவும் குறைந்த அளவில், சடங்கு ரீதியாகக் கையால்ப் பறிக்கப்படுகிறது. மிகக் குறைந்த உற்பத்தியே இதன் விலை உயர்வுக்குக் காரணமாகும். வெளியீட்டின் அளவைப் பொறுத்து 50 கிராமுக்கு சுமார் ₹1,950 வரை விற்கப்படுகிறது.
கோல்டன் நீடில்
வடகிழக்கு பகுதிகளில் தயாராகும் கோல்டன் நீடில்
'கோல்டன் நீடில்' என்பது அரிதான அறுவடைக் காலங்களில் மட்டுமேப் பெறப்படும் தங்க நிற நுனிகளைக் கொண்ட ஆர்த்தடாக்ஸ் தேயிலைகளைக் குறிக்கிறது. இதில் மிகச் சிறந்த மொட்டுகள் மட்டுமேப் பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதனால் இதன் உற்பத்தி மிகவும் குறைவாகவே இருக்கும். ஏலங்களில் அரிதானப் பங்குகள் ஒரு கிலோவிற்கு சுமார் ₹40,000 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மகாய்பாரி விண்டேஜ்
மகாய்பாரி விண்டேஜ் மற்றும் எஸ்டேட் ஸ்பெஷல்
மகாய்பாரியின் மரபுக் காடுகள் மற்றும் உயிர்வள வேளாண்மை (Biodynamic Farming) முறையால் விளைவிக்கப்படும் இந்தத் தேயிலைகள் அவற்றின் சுவைக்காக மட்டுமின்றி, அவற்றின் வரலாற்று மற்றும் உற்பத்திப் பின்னணிக்காகவும் விலை மதிப்பிடப்படுகின்றன. இவை மிகச் சிறியப் பிரிவுகளாக மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதால், தேயிலை ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. வெளியீட்டுத் தொகுதியைப் பொறுத்து மாறுபடும், வரையறுக்கப்பட்டப் பதிப்புகளுக்கு 100 கிராமுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.
நீலகிரி
நீலகிரி ஃப்ரோஸ்ட் தேயிலை
நீலகிரி பகுதியில் கடுங்குளிர் நிலவும் சமயங்களில் (Frosty Climatic Windows) அறுவடை செய்யப்படுவதால் இது மிகவும் அரிதானது. இது 100 கிராமுக்கு சுமார் ₹520 மற்றும் அதற்கு மேல் சில்லறை விலையில் விற்கப்படுகிறது. இந்த அரிதான தேயிலைகள் அதிக விலை கொடுக்கப்படுவதற்கு அவற்றின் பற்றாக்குறை, கைகளால்ப் பறிக்கப்படும் நுணுக்கம், சிறிய அளவிலான உற்பத்தி மற்றும் ஏலங்களில் உள்ள அதிக கிராக்கி ஆகியவையே முக்கியக் காரணங்களாகும்.