சர்வதேச நாய் தினம் 2024: மனிதர்களின் சிறந்த நண்பன் நாயின் சுவாரஸ்ய தகவல்கள்
மனிதர்களின் உற்ற தோழன் என வர்ணிக்கப்படும் நாய்களை போற்றும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26 அன்று உலகம் முழுவதும் சர்வதேச நாய் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2004ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற விலங்கு ஆர்வலரான கொலீன் பைஜால், நாய் உரிமையின் பல நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், செல்லப்பிராணியாக நாயின் வளர்ப்பை ஊக்குவிக்கவும் இந்த நாள் நிறுவப்பட்டது. நாய்கள் தோழமை, நிபந்தனையற்ற அன்பு மற்றும் பல ஆரோக்கிய நலன்களை வழங்குகின்றன. நாய்களுடன் தொடர்புகொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பார்வையற்றோருக்கு வழிகாட்டுதல், வெடிமருந்துகளை மோப்பம் பிடித்தல் மற்றும் போலீஸ் மற்றும் ராணுவத்திற்கு உதவுதல் போன்ற மதிப்புமிக்க சேவைகளையும் செய்கின்றன.
இந்தியாவில் நோய்களுக்கான முக்கியத்துவம்
இந்தியாவைப் பொறுத்தவரை கலாச்சாரம் மற்றும் புராணங்களில் நாய்கள் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன. நம் தெருக்களில் சுற்றித் திரியும் விசுவாசமான தெரு நாய்கள் முதல் நம் வீடுகளைப் பகிர்ந்து கொள்ளும் செல்ல நாய்கள் வரை, நாய்கள் பல நூற்றாண்டுகளாக இந்திய வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து வருகின்றன. நாய்களைப் பற்றி அதிகம் அறியப்படாத சில தகவல்கள் பின்வருமாறு:- நாய்களால் மனித உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். மனிதர்களைப் போலவே அவற்றாலும் கனவு காண முடியும். நாயின் வாசனை உணர்வு மனிதனை விட 10,000 முதல் 1,00,000 மடங்கு சக்தி வாய்ந்தது. நாய்கள் 250 வார்த்தைகள் மற்றும் கட்டளைகள் வரை கற்றுக்கொள்ள முடியும். பழமையான நாய் இனம் சலுகி என்று நம்பப்படுகிறது.