பணியிடங்களில் சக ஊழியர்களுடன் காதல்: உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்
செய்தி முன்னோட்டம்
அலுவலகப் பணியிடங்களில் காதல் உறவுகள் சாதாரணமாக இருந்தாலும், இந்தியாவில் இது அதிக அளவில் காணப்படுவதாக அஷ்லே மேடிசன் என்ற ரகசிய உறவுகளுக்கான தளம் நடத்திய சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது. பணியிடத்தில் காதல் உறவில் இருந்ததாக அல்லது தற்போது இருப்பதாக ஒப்புக்கொண்டவர்கள் பட்டியலில், 11 நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆய்வில் மெக்சிகோ முதலிடம் பிடித்தது. இந்தியா, அமெரிக்கா, பிரேசில், ஜெர்மனி உட்பட 11 நாடுகளில், 13,581 பெரியவர்களிடம் YouGov உடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தரவுகளின்படி, இந்தியாவில் பொது மக்களில் பத்தில் நான்கு பேர் (40%) தங்கள் சக ஊழியருடன் பழகியதாக அல்லது தற்போது பழகி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோ
மெக்சிகோவில் அதிகம்
மெக்சிகோவில் இந்த எண்ணிக்கை 43% ஆகவும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளில் இது 30% ஆகவும் உள்ளது. பணியிடத்தில் காதல் உறவில் ஈடுபடுவதற்கு ஆண்களே (51%) பெண்களை (36%) விட அதிகமாக வாய்ப்புள்ளது. மேலும், தொழில் ரீதியானப் பின்விளைவுகள் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாகப் பெண்கள் (29%) பணியிட உறவுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கின்றனர். அதேசமயம், ஆண்கள் தனிப்பட்ட விளைவுகளை (30%) அதிகம் கவலைப்படுபவர்களாக உள்ளனர். இந்தியாவின் இந்தப் போக்கு, வெளிப்படையானத் திருமணங்கள் (Open Marriages) போன்ற பாரம்பரியமற்ற உறவுகளை நோக்கி மக்கள் திரும்புவதைக் குறிக்கிறது. திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைத் தேடும் Gleeden என்ற மற்றொரு தளத்தின் ஆய்வு, 35% இந்தியர்கள் வெளிப்படையான உறவில் உள்ளனர் என்பதைக் கண்டறிந்துள்ளது.