உலகிற்கே முன்னோடியாக உள்ள இந்தியாவின் உணவு நுகர்வு முறை; உலக வனவிலங்கு நிதியத்தின் அறிக்கையில் பாராட்டு
வியாழன் அன்று வெளியிடப்பட்ட உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF) வாழும் கிரகம் (Living Planet) அறிக்கையின்படி, இந்தியாவின் உணவு நுகர்வு முறை, உலகின் முக்கிய பொருளாதாரங்களில் (ஜி20 நாடுகள்) மிகவும் நிலையானதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற உலக நாடுகள் இந்தியாவின் உணவு நுகர்வு முறையைப் பின்பற்றினால், 2050ஆம் ஆண்டில் உணவு உற்பத்தியை ஆதரிக்கும் பூமிக்கு இது மிகக் குறைந்த காலநிலை பாதிப்பாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் உணவு நுகர்வு முறை இந்த ஜி20 நாடுகளில் மிக மோசமாக இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2050இல் காலநிலை மாற்ற இலக்கு
வாழும் கிரகம் அறிக்கையில், "2050 ஆம் ஆண்டளவில் உலகின் முக்கிய பொருளாதாரங்களின் தற்போதைய உணவு நுகர்வு முறைகளை உலகில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டால், உணவு தொடர்பான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கான 1.5° செல்சியஸ் காலநிலை (வெப்பநிலை வரம்பு) இலக்கை 263 சதவிகிதம் தாண்டிவிடுவோம். மேலும், உணவுத் தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக ஒன்று முதல் ஏழு பூமிகள் நமக்கு அப்போது தேவைப்படும்." என்று எச்சரித்துள்ளது. அதே நேரம் இந்தியாவை பாராட்டியுள்ள அறிக்கை, அனைத்து நாடுகளும் இந்தியாவின் தற்போதைய நுகர்வு முறைகளைப் பின்பற்றினால், 2050ஆம் ஆண்டளவில் உணவு உற்பத்தியை ஆதரிக்க பூகோளத்திற்கு ஒன்றுக்கும் குறைவான கிரகம் (0.84) மட்டுமே தேவைப்படும் என்று தெரிவித்துள்ளது.
அர்ஜென்டினாவை பின்பற்றினால் ஏழு கிரகம் வேண்டும்
இந்திய சூழ்நிலை உணவுக்கான கிரக காலநிலை எல்லையை விட ஓரளவு சிறப்பாக உள்ளது என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது. இது வெப்பமயமாதல் வரம்பின் 1.5° செல்சியஸுக்கு கீழ் வைத்திருக்க உணவு அமைப்புகள் உருவாக்கக்கூடிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் மிகப்பெரிய அளவாகும். ஒப்பிடுகையில், அர்ஜென்டினாவின் நுகர்வுப் போக்குகளைப் பின்பற்றினால், உலகிற்கு 7.4 பூமிகள் தேவைப்படும். நிலைத்தன்மையின் அடிப்படையில் அர்ஜென்டினா பலவீனமான அமைப்பைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா (6.8), அமெரிக்கா (5.5), பிரேசில் (5.2), பிரான்ஸ் (5), இத்தாலி (4.6), கனடா (4.5), மற்றும் பிரிட்டன் (3.9) உள்ளன. சிறந்தவற்றில், இந்தோனேஷியா (0.9) இந்தியாவுக்கு (0.84) பின்னும், சீனா (1.7), ஜப்பான் (1.8) மற்றும் சவுதி அரேபியாவுக்கு (2) முன்னும் உள்ளது.
ஊட்டச்சத்துள்ள தானியங்கள் உற்பத்தியில் இந்தியா
காலநிலையை எதிர்த்து வளரும் வலுவான தினைகளை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சிகளையும் அறிக்கை பாராட்டியது. தேசிய தினை பிரச்சாரம் இந்த பழங்கால தானியத்தின் தேசிய நுகர்வு அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மிகவும் மீள்தன்மை கொண்டது. "அதிக நிலையான உணவுகளை உட்கொள்வது உணவை உற்பத்தி செய்ய தேவையான நிலத்தின் அளவைக் குறைக்கும். மேய்ச்சல் நிலம், குறிப்பாக, இயற்கை மறுசீரமைப்பு உள்ளிட்ட பிற நோக்கங்களுக்காக விடுவிக்கப்படலாம்" என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருப்பு வகைகள் மற்றும் ஊட்டச்சத்து தானியங்கள், தாவர அடிப்படையிலான இறைச்சி மாற்றீடுகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த ஆல்கா இனங்கள் போன்ற ஆரோக்கியமான மாற்று புரத மூலங்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.