Loading...
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம் சத்தீஸ்கர் கைரா: பூஜ்ஜியம் மின் கட்டண சாதனை
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமமாக கைரா மாறியுள்ளது.

இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம் சத்தீஸ்கர் கைரா: பூஜ்ஜியம் மின் கட்டண சாதனை

எழுதியவர் Vasuki
Nov 03, 2026
06:46 pm

செய்தி முன்னோட்டம்

நாட்டில் புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு முன்னெடுத்து வரும் திட்டங்களின் கீழ், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமம் தனது ஒட்டுமொத்த மின்தேவையையும் சூரியசக்தி மூலம் பூர்த்தி செய்து, நாட்டின் முதல் முழுமையான சூரியசக்தி கிராமமாக உருவெடுத்துள்ளது. சத்தீஸ்கரின் ராஜ்நந்த்காவ் மாவட்டத்தில் அமைந்துள்ள கைரா கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தடையின்றி சூரியசக்தி மின்சாரம் வழங்கப்பட்டதன் மூலம், அங்குள்ள மக்களுக்கு மின்கட்டணம் முற்றிலும் 'பூஜ்ஜியம்' என்ற அளவை எட்டியுள்ளது.

141 வீடுகள்

282 கிலோவாட் உற்பத்தித் திறன்

மொத்தம் 889 குடியிருப்பாளர்களை கொண்ட இந்தக் கைரா கிராமத்தில் 141 வீடுகள் உள்ளன.

மத்திய அரசின் முதன்மைத் திட்டமான 'பிஎம் சூர்ய கர் முஃப்ட் பிஜிலி யோஜனா' திட்டத்தின் கீழ், கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தலா 2 கிலோவாட் உற்பத்தித் திறன் கொண்ட அதிநவீன சூரியசக்தித் தகடுகள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன.

இதன் மூலம் அக்கிராமத்தில் ஒட்டுமொத்தமாக 282 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மக்களின் முழுமையான தினசரி மின்தேவை தன்னிறைவடைந்துள்ளது.

திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 93 வீடுகள் சூரியசக்தியைப் பெற்ற நிலையில், தற்போது அனைத்து வீடுகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அரசு மானியம்

கிராம மக்கள் மின் உற்பத்தியாளர்களாக மாற்றம்

வீடுகளில் சூரியசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான அடிப்படை மற்றும் பிரதான செலவுகளை மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் முழுமையாக ஈடுசெய்துள்ளன.

மீதமுள்ள செலவுத் தொகையை முன்னணி பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி வழியாகச் செலுத்தப்பட்டதால், கிராம மக்கள் தங்களது சொந்த பணத்திலிருந்து செலவழிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.

மின் கட்டணச் சுமையிலிருந்து முழுமையாக விடுபட்டது மட்டுமின்றி, கிராம மக்கள் தங்களது சொந்தத் தேவைக்குப் போக மீதமுள்ள உபரி மின்சாரத்தை அரசு மின் விநியோகக் கட்டமைப்புக்கே திருப்பி அனுப்பி வருமானம் ஈட்டி வருகின்றனர்.

இதன் மூலம் சாதாரண மின் நுகர்வோராக இருந்த கிராம மக்கள், தற்போது ஆற்றல் தயாரிப்பாளர்களாக மாறிப் பொருளாதார ரீதியாகவும் பலனடைந்து வருவது நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT