இந்தியாவின் முதல் உள்நாட்டு H5N1 பறவைக் காய்ச்சல் தடுப்பூசி அறிமுகம்: ஒரு டோஸில் கோழிகளுக்கு 6 மாத பாதுகாப்பு
செய்தி முன்னோட்டம்
அதிக தொற்றுத் திறன் கொண்ட H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸுக்கு எதிரான இந்தியாவின் முதல் உள்நாட்டுத் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் தேசிய நிறுவன விஞ்ஞானிகள் இதனை உருவாக்கியுள்ளனர். மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று போபாலில் நடைபெற்ற நிகழ்வில் இத்தடுப்பூசியை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்தியாவில் கோழிப்பண்ணைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள 2.3.2.1a வகை H5N1 வைரஸை எதிர்த்து இது சிறப்பாக செயல்படுகிறது. இந்த தடுப்பூசியை ஒரு டோஸ் செலுத்தினால் கோழிகளுக்கு சுமார் ஆறு மாதங்கள் வரை நோய் எதிர்ப்புப் பாதுகாப்பு கிடைக்கும்.
ஆராய்ச்சி வெற்றி
டாக்டர் எஸ். நாகராஜன் தலைமையிலான 8 விஞ்ஞானிகள் குழுவின் ஓராண்டு கால ஆராய்ச்சி வெற்றி
பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த இதுவரை வெளிநாட்டுத் தடுப்பூசிகளையே இந்தியா நம்பியிருந்த நிலையில் இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த 2025 செப்டம்பர் மாதம் முதன்மை விஞ்ஞானி டாக்டர் எஸ். நாகராஜன் தலைமையிலான எட்டு விஞ்ஞானிகள் குழு இப்பணியைத் தொடங்கியது.
இக்குழுவில் டாக்டர் மனோஜ் குமார், டாக்டர் சி. தோஷ், டாக்டர் எச்.வி. முருகர் மற்றும் டாக்டர் அனிகேத் சன்யால் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மேலும் டாக்டர் செந்தில்குமார், டாக்டர் நவீன் குமார் மற்றும் டாக்டர் யோகிஷாராத்யா ஆகிய விஞ்ஞானிகளும் இணைந்து ஓராண்டு உழைப்பில் இதனை உருவாக்கியுள்ளனர்.
பண்ணையாளர்களுக்கு மீட்பு
100% உயிரிழப்பு மற்றும் கோழிகளைக் கூண்டோடு அழிக்கும் நிதி இழப்புகளிலிருந்து பண்ணையாளர்களுக்கு மீட்பு
H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் கோழிப்பண்ணைகளில் பரவினால் நூறு சதவீதம் வரை கோழிகளின் உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.
நோய் பரவலைத் தடுக்கப் பாதிக்கப்பட்ட பண்ணைகளில் உள்ள கோழிகளைக் கூண்டோடு அழிப்பதால் விவசாயிகளுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது.
புதிய உள்நாட்டுத் தடுப்பூசி முட்டையிடும் கோழிகள் மற்றும் இனப்பெருக்க கோழிகளுக்கு வலுவான நோய் எதிர்ப்பு பாதுகாப்பை வழங்கும்.
இதன் மூலம் கோழிகளை அழிப்பதைத் தவிர்த்து பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தையும் கோழிப்பண்ணைத் தொழிலையும் பாதுகாக்க முடியும்.
தடுப்பூசிகளின் முக்கியத்துவம்
மனிதர்களுக்குப் பரவும் அபாயத்தைத் தடுப்பதிலும் புதிய தடுப்பூசியின் முக்கியப் பங்களிப்பு
பறவைக் காய்ச்சல் என்பது கோழிகளை மட்டுமே பாதிக்கும் நோயல்ல என்றும் மனிதர்களுக்கும் பரவும் அபாயம் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
கோழிகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்பைக் குறைக்க முடியும்.
எனவே இந்த உள்நாட்டுத் தடுப்பூசி கோழிப்பண்ணையாளர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மேலும் போபால் நிறுவனத்தில் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வகம் அமைக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.