ஃபூட் டெலிவரி ஆப்களை எப்போதும் சார்ந்து இருப்பது தோன்றுகிறதா? உங்களுக்கு உதவ சில டிப்ஸ்
இப்போதெல்லாம், சமைக்க சோம்பேறித்தனமாக இருந்தாலோ, முடியவில்லை என்றாலோ உடனே உணவை ஆர்டர் செய்வது வழக்கமாகி விட்டது. சில நேரங்களில், நம்மால் வீட்டில் தயார் செய்ய முடியாத உணவுகளை சாப்பிட, இந்த ஆன்லைன் டெலிவரி வரமாகவே இருக்கிறது. இருப்பினும், நிதி மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படையில் பார்க்கும் போது அடிக்கடி ஆர்டர் செய்வது சரியான தேர்வாக இருக்காது. இதிலிருந்து வெளிவர உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம். எப்போதும் ஒரு உணவகத்தின் நம்பகத்தன்மையை வைத்து, அதன் உணவின் தரத்தையும், அது தயாரிக்கப்படும் முறையையும் நம்பிவிட முடியாது. இப்படி உணவகங்களில் வாங்கப்படும் உணவுகளுக்கு, ஒரு வாரத்திற்கோ, மாதத்திற்கோ எவ்வளவு செலவாகிறது என கணக்கிடுங்கள். அது உங்கள் தனிப்பட்ட சேமிப்பில் மிகப்பெரிய பங்கை கரைக்கிறது என்பதை அப்போது உணருவீர்கள்.
உடல்நல பாதிப்புகளை ஆராயுங்கள்
பண செலவுகள் மட்டுமின்றி, இந்தப் பழக்கத்தால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளைக் கவனியுங்கள். தவறான உணவுமுறை பழக்கவழக்கங்கள், உங்கள் உடல்நிலையை மோசமாக்கி, வைத்திய செலவில் கொண்டு போய் விடவும் வாய்ப்புள்ளது. ஒரே நாளில் இந்த பழக்கத்தை திடீரென்று நிறுத்த முடியாது, அது சாத்தியமற்றது. இருப்பினும், நீங்கள் வாரத்திற்கு எத்தனை முறை ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை ஆராய்ந்து, அதை நிச்சயமாகக் குறைக்கலாம். உங்களுக்கு நீங்களே ஒரு கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வாரமும் ஒன்று அல்லது இரண்டு உங்களுக்கு பிடித்த புதிய உணவை நீங்களே சமைத்து முயற்சிக்கவும். அதை தவிர்க்க, உங்களுக்கு பிடித்த உணவை தயாரிக்க தேவையான பொருட்களை சேகரித்து வைத்து, வார இறுதி நாட்களில், உங்கள் நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ சேர்ந்து சமைக்கலாம்.