புரட்டாசி ஸ்பெஷல் - வெஜ் சிக்கன் குழம்பு செய்வது எப்படி ?
புரட்டாசி மாதம் துவங்கி தற்போது நடந்து வரும் நிலையில், நம்முள் பலரும் அசைவ உணவுகளை சேர்க்காமல் விரதம் மேற்கொண்டிருப்பீர்கள். அவர்களுக்கான பதிவு தான் இது. இப்பொது மார்க்கெட்களில் சைவ உணவு சாப்பிடுவோருக்காகவே வெஜ் சிக்கன் என்பது பாக்கெட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பார்ப்பதற்கு சிக்கன் போலவே இருக்கும் இது, பீன்சின் விதை கொண்டு பவுடர் தயாரித்து அதில் ப்ரோட்டீன் பவுடர் சேர்த்து தயாரிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. சைவ உணவு பிரியர்கள் இதனை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று கூறப்படுவதால், பலருக்கும் தெரியாத இந்த வெஜ் சிக்கன் கொண்டு குழம்பு வைக்கும் முறையினை தான் நாம் இந்த குறிப்பில் காணவுள்ளோம்.
செய்ய தேவையான பொருட்கள்
வெஜ் சிக்கன் - தே.அளவு ந.எண்ணெய் - 4 டீஸ்பூன் பட்டை - சிறுதுண்டு கிராம்பு - 2 கடற்பாசி - 1 சோம்பு - 1/2 டீஸ்பூன் பெ.வெங்காயம் - 1 சி.வெங்காயம் - 1 கப் கறிவேப்பிலை தேங்காய் துருவல் - சிறிதளவு தக்காளி - 3 ம.தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் சிக்கன் மசாலா - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கொத்தமல்லி தழை
செய்முறை விளக்கம்
உணவு குறிப்புகள் : அடுப்பில் கடாயை வைத்து அதில் 4 டீஸ்பூன் ந.எண்ணெயினை ஊற்றவும். எண்ணெய் காய்ந்த பிறகு அதில், நாம் எடுத்து வைத்துள்ள பட்டை, கிராம்பு, கடற்பாசி, சோம்பு 1/2 டீஸ்பூன் உள்ளிட்டவைகளை சேர்த்து கிளறவும். பின்னர் அதில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து கிளறிவிட்டு, நறுக்கி வைத்துள்ள பெ.வெங்காயம் மற்றும் சி.வெங்காயத்தினை போட்டு நன்கு எண்ணையிலேயே வதங்க விடவும். நன்கு எண்ணெயில் வெங்காயம் சிவக்க வதங்க வேண்டும்.
தேங்காய் மசாலா
வெங்காயம் நன்கு வதங்கிய நிலையில், அதிலிருந்து சிறிதளவு வெங்காயத்தினை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் துருவிய தேங்காய் சிறிதளவு சேர்த்து, 1/2 டீஸ்பூன் சோம்பையும் சேர்த்து நன்கு தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். பிறகு அடுப்பில் வதங்கி கொண்டிருக்கும் வெங்காயத்துடன் நாம் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் சேர்த்து வதக்குங்கள். பின்னர் அதில் சிறிதளவு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து வதங்க விடவும். 3 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்க்கவும். அதன் பச்சை வாடைநீங்கிய பிறகு, அதில் பாக்கெட்டில் வரும் இந்த வெஜ் சிக்கனை தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.
நிஜ சிக்கன் குழம்பின் சுவையை மிஞ்சும் வெஜ் சிக்கன் குழம்பு ரெடி
இந்த வெஜ் சிக்கன் ஏற்கனவே சுத்தம் செய்து பதப்படுத்தி பாக்கெட்டில் அடைப்பதால் இதனை கழுவ வேண்டிய அவசியம் இல்லை. வெஜ் சிக்கனும் நன்கு ஒரு சேர வதங்கிய பிறகு, அதில் சிக்கன் மசாலா, மிளகாய் பொடி ஆகியவைகளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 3ல் இருந்து 5 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்கவிடுங்கள். அதன்பின்னர் அதில் நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவையும் சேர்த்து மூடி போட்டு மீண்டும் நன்கு கொதிக்க விடுங்கள். வெஜ் சிக்கன் நன்கு பஞ்சு போல் வெந்து குழம்பு பதத்திற்கு வந்த பிறகு கொத்தமல்லி தழைகளை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான் சுவையான வெஜ் சிக்கன் குழம்பு ரெடி.