பெற்றோர்கள் கவனத்திற்கு: குழந்தைகளை சுதந்திரமாகவும், தனிச்சையாகவும் விளையாட ஊக்குவிக்க வேண்டும்
பெற்றோர்கள், குழந்தைகளுடன் தங்கள் நேரத்தை செலவிட வேண்டியது முக்கியமாகும். அது அவர்கள் வளர்ச்சிக்கு உதவும் என்பது நிதர்சனம். எனினும், குழந்தைகளை தன்னம்பிக்கையுடன், தன்னிச்சையாக விளையாட ஊக்குவிப்பதும் முக்கியம். சுயசார்புடன் அவர்கள் வளர்வது, அவர்கள் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். குழந்தைகளுக்கு சுதந்திரமாக விளையாட கற்றுக்கொடுப்பது எப்படி என்பது குறித்து நிபுணர்கள் கூறுவது: தன்னிச்சையாக விளையாடுவதன் முக்கியத்துவத்தை குழந்தைக்கு விளக்குங்கள்: ஒவ்வொரு நாளும் சுமார் 10-15 நிமிடங்கள், அவர்கள் தனியாக விளையாட வேண்டும் என்றும் புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உங்கள் பிள்ளைக்கு புரியவையுங்கள். அதன் முக்கியத்துவத்தையும் அவர்களுக்கு கூறுங்கள். படைப்பாற்றலை தூண்டும் செயல்களை பட்டியலிடுங்கள்: குழந்தைகள் தாமாகவே விளையாடக்கூடிய படைப்பாற்றலை தூண்டும் வகையில் இருக்கும் செயல்களை குழந்தைகளுக்கு தரலாம்.
குழந்தைகளின் சுதந்திர நடத்தைக்கு நீங்கள் முன்மாதிரி
குழந்தைகளுக்கு கொஞ்சம் இடம் கொடுங்கள்: உங்கள் குழந்தை ஒரு செயலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு தேவைப்படும் இடைவெளியை கொடுக்க வேண்டும். விளையாட்டை எவ்வாறு விளையாட வேண்டும் என்று எப்போதும் வழிநடத்திக்கொண்டே இல்லாமல், அவர்களே அதை கண்டுபிடிக்க இடம் தர வேண்டும். குழந்தைகளின் சுதந்திர நடத்தைக்கு நீங்கள் முன்மாதிரி: குழந்தைகள் சுயமாக செய்யும் எல்லா செயல்களும், வீட்டிலிருக்கும் உங்களை முன்மாதிரியாக கொண்டே நடைபெறும். நீங்கள் தனிமையில் புத்தகம் படிப்பவராக இருந்தால், அவர்களும் அதை கடைபிடிப்பார்கள். பாராட்ட வேண்டும்: குழந்தைகள் தனியே, யாரையும் சாராமல், உபயோகமாக நேரத்தை கழிக்கும் போது, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டுங்கள்.