
ஆரோக்கியமற்ற உணவு விளம்பரங்கள், குழந்தைகளிடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா?
செய்தி முன்னோட்டம்
World Obesity Federation என்ற கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, 2035க்குள் உலகில் பாதி பேர், உடல் பருமனாக இருப்பார்கள் என்று கூறுகிறது.
மேலும், குழந்தைகளிடத்தில், உடல் பருமன் விகிதம், 2020 ஆண்டின் அளவை விட இரட்டிப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு காரணமாக, குழந்தைகளின் உணவு தேர்வும், அந்த உணவு தேர்வை பாதிக்கும் முக்கிய காரணியாக, சந்தைப்படுத்துதல் மற்றும் அதை சார்ந்த விளம்பரங்களும் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
குழந்தைகள், ஒரு இலாபகரமான சந்தை என்பதை விளம்பரதாரர்கள் கண்டுகொண்டுள்ளனர். அதற்கு காரணம், பெற்றோர்கள் பொருட்களை வாங்கும் போது, அந்த முடிவுகளில், குழந்தைகளால் கணிசமான பாதிப்பும், செல்வாக்கும் உண்டு.
குழந்தைகள் ஆரோக்கியம்
ஆரோக்கியமற்ற உணவு தேர்வுகளை இயல்பாக்கும் விளம்பரங்கள்
விளம்பரதாரர்கள், ஆரோக்கியமற்ற உணவுகளை, குழந்தைகளை கவரும் வண்ணம், வண்ணமயமான பேக்கேஜிங், வேடிக்கையான கேரக்டர்கள் மற்றும் கவர்ச்சியான ஜிங்கிள்கள் போன்ற தந்திரங்களை பயன்படுத்தி, குழந்தைகளின் உணர்ச்சிகளைக் கவரும் வகையில் பொருட்களை விற்கின்றன.
இதுபோன்ற சந்தைப்படுத்தல் உத்திகள், குழந்தைகளிடையே ஆரோக்கியமற்ற உணவுத் பழக்கத்தையும், உணவின் தேர்வுகளுக்கும் முக்கிய பங்காற்றுகிறது எனக்கூறுகிறார்கள் நிபுணர்கள்.
இத்தகைய ஆரோக்கியமற்ற உணவுகள், காலப்போக்கில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
சந்தைப்படுத்தப்படும் ஆரோக்கியமற்ற உணவுகளில், அதிக கலோரிகள், சர்க்கரை, உப்பு கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்தற்ற முறையில் உள்ளன.
"இதுபோன்ற விளம்பரங்களைக் கட்டுப்படுத்த, அரசாங்கம் சில சட்டதிருத்தங்கள் கொண்டுவரலாம்" என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதை தடுக்க, வீட்டில் தயாரிக்கப்பட்ட, ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை, குழந்தைகளிடையே, பெற்றோர்கள் ஊக்குவிக்கலாம்.