காலத்தின் ஓட்டத்தில் மாறும் நட்பின் படிநிலைகள்
நம் வாழ்வில் நண்பர்களுக்கென தனி இடம் உண்டு. அவர்களுடன் நாம் செலவிடும் நேரம், நாம் வெளிப்படுத்த இயலாத ஒரு வகையான மகிழ்ச்சியை நமக்குக் கொடுக்கவல்லது. ஆனால், எல்லா காலமும் நம் நண்பர்களுடனான பிணைப்பு, ஒரேமாதிரியாக இருக்குமென நாம் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்தால் ஏமாற்றமே எஞ்சும்! பள்ளிக்காலத்தில் பொறுப்புகளற்று, மகிழ்ச்சியை மட்டுமே பிரதானமாகக்கொண்டு பிணைக்கப்பட்டிருக்கும் நட்பு, கல்லூரிக் காலத்தில் பொறுப்புகளையும் சேர்த்து சுமக்கத் தொடங்குகிறது. நாம் வளர வளர, நம் நட்பு வட்டம் சுருங்கும். பள்ளியில் தோளோடு தோள் நின்றாலே தோழமை என்ற எண்ணமெல்லாம் நாம் வளரும் போது தானாகவே மறைந்து விடும். மகிழ்ச்சியை பிரதானமாகக் கொண்ட நட்பு, பின்னாளில் குறிக்கோளைப் பிரதானமாகக் கொண்டதாக மாறும். நமது குறிக்கோளை அடைய உதவுபவர்கள் நமக்கு நெருக்கமாவார்கள்.
மாற்றம் காணும் நட்பு:
அதற்காக மற்ற நண்பர்களை இழப்போம் என்று அர்த்தமில்லை, அவர்களுடன் நாம் செலவழிக்கும் நேரம் சற்றுக் குறையும். ஒரே வயதினரோடு தான் நட்பு கொள்ள வேண்டும் என்றிருக்கும் இளவயது எண்ணமெல்லாம், நம் மனப் பக்குவத்தால் மாறும். மழலை கொஞ்சும் குழந்தை முதல், நரை படர்ந்த இளைஞர்கள் வரை நமது நட்பு வட்டம் விரியும். நம்மைக் கடந்து செல்லும் போது புன்னகைப்பவர்கள் கூட நமது நண்பர்களாகத் தோன்றுவார்கள். நட்பின் பல பரிமாணங்களை உணரத் தொடங்கும். பார்த்தால், பேசினால் மட்டுமே நட்பு என்ற நிலை மாறி, காலம் நட்பின் புதிய படிநிலைகளை நமக்கு அறிமுகப்படுத்தும். ஆனால் காலங்கள் மாறினாலும், கோலங்கள் மாறினாலும், என்றென்றும் மனதில் பசுமையாக நிலைத்திருக்கும் ஒரே பந்தம், நட்புறவு மட்டுமே என்பதும் மறுப்பதற்கில்லை!