நாம் முதலீடு செய்த பணம் எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாகும்? அதனை கணக்கிடுவது எப்படி?
இன்று வேகமாக சென்று கொண்டிருக்கும் உலகில், நாம் சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்து பணத்தின் மூலம் பணத்தைப் பெருக்கும் தாரக மந்திரத்தை அனைவரும் அறிந்திருப்பது மிகவும் அவசியமாகிறது. பணத்தைக் கொண்ட பணத்தை உருவாக்கும் சூத்திரத்தை அனைவரும் அறிய வாய்ப்புகள் மிக மிகக் குறைவும். ஆனால், அதற்கு மாற்றாக பிற நிதி சேவை நிறுவனங்கள் அளிக்கும் முதலீட்டுக் கருவிகளை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். வங்கிகள் வழங்கும் நிரந்தர வைப்பு நிதி திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் ஆகியவை பொதுமக்களிடையே முக்கியமான முதலீட்டுக் கருவிகளாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், இந்த முதலீட்டுக் கருவிகள் மூலம் எவ்வளவு காலத்தில் நமது பணம் இரட்டிப்பாகும், அதனை கணக்கிடுவது எப்படி? பார்க்கலாம்.
முதலீடு இரட்டிப்பாவதைக் கணக்கிடும் முறை:
ஒரு குறிப்பிட்ட முதலீட்டுக் கருவியின் மூலம் நாம் செய்திருக்கும் முதலீடானது இரட்டிப்பாவதைக் கணக்கிட எளிய கணக்கியல் முறை ஒன்று பின்பற்றப்படுகிறது. 72ம் விதி (Rule of 72) என அதனைக் குறிப்பிடுகிறார்கள். இந்த விதியின் உதவியுடன், நாம் செய்திருக்கும் முதலீடானது எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்பதை நம்மால் எளிதாகக் கணக்கிட முடியும். நாம் செய்திருக்கும் முதலீட்டிற்கு நமக்குக் கிடைக்கும் வட்டி விகிதத்தைக் கொண்டு 72ஐ வகுத்தால் கிடைக்கும் விடையே, நம்முடைய முதலீட்டு இரட்டிப்பாகும் கால அளவு. இதனை உதாரணங்களுடன் தெரிந்து கொண்டால் இன்னும் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.
முதலீடு இரட்டிப்பாகும் கால அளவு:
உதாரணத்திற்கு, வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களை (Fixed Deposit) எடுத்துக் கொள்வோம். எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகள், 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்பு நிதி திட்டங்களுக்கு, 3% முதல் 7% வரையிலான வட்டியை வழங்கி வருகின்றன. இந்த வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.1 லட்சம் முதலீடு செய்திருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். இந்த முதலீடு இரட்டிப்பாவதற்கு, அதாவது மேற்கூறிய ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் ஆவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் எனக் கணக்கிடலாம். 72ம் விதியின்படி, 72/7 என்றால் 10.28 என்ற விடை வருகிறது. அப்படியென்றால், 7% வட்டி விகிதத்தில் 10 ஆண்டுகளில் நம்முடைய முதலீடு இரட்டிப்பாகும்.
பிற முதலீட்டுக் கருவிகளின் கணக்கீடு:
மேலும் ஒரு உதாரணமாக தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி50-ஐ எடுத்துக் கொள்வோம். கடந்த ஓராண்டில், முதலீட்டாளர்களுக்கு 13.5% லாபம் அளித்திருக்கிறது நிஃப்டி50. 72ம் விதியின் படி இதனைக் கணக்கிட்டால், 72/13.5= 5.33. நிஃப்டி50-யில் முதலீடு செய்தால், 13.5% என்ற லாபத்துடன் ஐந்து ஆண்டுகளில் நம்முடைய முதலீடு இரட்டிப்பாகும். ஆனால், நிஃப்டி50 என்பது அனைவருக்குமான முதலீட்டு கருவி கிடையாது. அதில் நன்கு பரீட்சியமானவர்கள் மட்டுமே முதலீடு செய்வது நல்லது. 12% என்ற வட்டி விகித்ததுடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், ஆறு ஆண்டுகளில் நம்முடைய முதலீடு இரட்டிப்பாகும். இதே போல், பிற முதலீட்டுக் கருவிகளி வழங்கும் லாபத்தையும், வட்டி விகிதத்தையும் வைத்து, எத்தனை ஆண்டுகளில் நம்முடைய முதலீடு இரட்டிப்பாகும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம்.