வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய மசாலாக்கள் எவை?
இந்திய உணவுகளின் தனித்துவம் என்றாலே அதன் நறுமணம் மற்றும் அதில் உள்ளிடும் சுவையான மசாலாக்கள் தான். இந்த மாயாஜால மசாலாக்கள், சாதாரண உணவைக்கூட, அறுசுவை உணவாக மாற்றும் வல்லமை உடையது. ரெடிமேட் மசாலா கலவைகள் நமக்கு வசதியாக தோன்றினாலும், வீட்டிலேயே சொந்தமாக தயாரிப்பதில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது. சுவையான, சுகாதாரமான முறையில், உங்கள் நேரடி கண் பார்வையில் தயாரிக்கப்படும் மசாலா பொடிகளில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சுவைகளை மாற்றியமைக்கவும் முடியும். சிலருக்கு அதிக காரம் ஒவ்வாது, சிலருக்கோ அதில் சேர்க்கப்படும் ஒரு சில மசாலா பொருட்கள் பிடிக்காமல் இருக்கலாம். அதனால், வீட்டில் தயார் செய்வதே சரியான தேர்வாக இருக்கும்.
கரம் மசாலா
கரம் மசாலா இந்திய சமையலறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மசாலா தூள். இது இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, கருப்பு மிளகு, ஜாதிக்காய், வளைகுடா இலை, ஷாஹி ஜீரா, மல்லிவிதை, கடற்பாசி ஆகியவற்றின் கலவையாகும். இது சுவை மற்றும் செழுமையின் ஒரு அடுத்த லெவெலுக்கு எடுத்து செல்ல உதவுகிறது. மேற்கூறிய பொருட்களை வறுத்து, உலர்த்தி, பொடியாக அரைக்கவும். இதை காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து, தேவைப்படும்போது பயன்படுத்தவும்.
சாட் மசாலா
சாட் மற்றும் சில தின்பண்டங்களின் சுவையை அதிகரிக்க, இந்த மசாலா பயன்படுகிறது. ஒரு சிட்டிகை இந்த மசாலா பொடியை தூவி, மோமோஸ், கறி வகைகள் அல்லது சாலட்கள் என எந்த உணவையும் மேம்படுத்தலாம். மசாலாவில் முக்கியமாக தனியா, சீரகம், மாங்காய் தூள், கருப்பு கல் உப்பு, மிளகு, சிட்ரிக் அமிலம் மற்றும் புதினா இலைகளை உள்ளடக்கி செய்யப்படுகிறது. தனியா, சீரகம் மற்றும் ஓமத்தை வறுக்கவும். ஆறியதும் இவற்றை மீதமுள்ள பொருட்களுடன் கலக்கவும்.
ரசம் பொடி
ரசம் பொடி, ரசம் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருள் ஆகும். சிலர் உடனுக்குடன் அரைத்து, ரசம் வைப்பார்கள். சிலர் ரசப்பொடியாக தயாரித்து வைத்துக்கொள்வார்கள். காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லி விதைகள், இந்த ரசப்பொடியின் மூலாதாரம். அதனுடன், கறிவேப்பிலை, பெருங்காயம், கருப்பு மிளகு, மஞ்சள் தூள் மற்றும் பாசிப்பருப்பு ஆகியவை சேர்க்கப்படுகின்றன. ஈரப்பதத்தைப் போக்க, மேற்கூறிய பொருட்களை, எண்ணெய் சேர்க்காமல் வறுத்து, பொடியாக அரைக்கவும். புளிகரைசலில், இந்த ரசப்பொடி தூவி, கொதிக்க வைத்தால், சுவையான ரசம் தயார்
சாம்பார் பொடி
சாம்பார் பொடி தென்னிந்திய சமையலறைகளில் பிரதானமாக இருப்பது. இது சாம்பார் செய்வதற்கு மட்டுமின்றி, எந்த காய்கறியை செய்யவும் பயன்படுத்தலாம். இந்த பொடி, பருப்பு வகைகள் (உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு ), சீரகம், கொத்தமல்லி விதை, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை போன்ற பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. எல்லாவற்றையும் எண்ணையின்றி ஒவ்வொன்றாக வறுத்து, ஆறவைத்து பொடியாக அரைக்கவும்.